[X] Close

மது பாட்டிலில் காந்தி படம்: இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கோரியது


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 16:42 pm
  • அ+ அ-

-பிடிஐ

மது பாட்டில்களில் மகாத்மா காந்தியின் படத்தை வைத்து சர்ச்சையைக் கிளப்பிய இஸ்ரேலிய மது உற்பத்தி நிறுவனம் இந்திய அரசாங்கத்திடமும் இந்திய மக்களிடமும் அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக  மன்னிப்பு கோரியது.

இஸ்ரேலிய நிறுவனத்தின் மது பாட்டில்கள் மீது காந்தியின் படம் பொறித்திருப்பது குறித்து இந்தியாவின் மாநிலங்களவை எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்தனர்.

இப்பிரச்சினையை ஆராய்ந்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட பீர் கம்பெனி பிராண்ட் மேலாளர் கிலாட் ட்ரார், நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"மல்கா பீர் நிறுவனம் இந்திய மக்களிடமும் இந்திய அரசிடமும் அவர்களின் உணர்வைப் புண்படுத்தியதற்காக தனது மனமார்ந்த மன்னிப்பைக் கோருகிறது. மகாத்மா காந்தியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அவரது படத்தை எங்கள் மது பாட்டில்களில் பொறித்தமைக்காக நாங்கள் வருந்துகிறோம்.

இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தப் பிரச்சினையை எழுப்பியவுடன், உற்பத்தி மற்றும் பாட்டில் விநியோகத்தை நிறுத்திக் கொள்கிறது. மேலும், இப்போது சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட பாட்டில்களையும் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மூன்று முன்னாள் பிரதமர்களை உள்ளடக்கிய வரையறுக்கப்பட்ட பதிப்பு பாட்டில்களில்  டேவிட் பென்-குரியன், கோல்டா மீர் மற்றும்  மெனாச்செம் பேகின்,  சியோனிசத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியோடர் ஹெர்ஸ்ல் தவிர, வரையறுக்கப்பட்ட பதிப்பு பாட்டில்களில் இடம்பெறும் ஐந்தாவது முக்கிய நபராக காந்தி இருந்தார். உண்மையில் மகாத்மா காந்தியைக் கவுரவிப்பதே எங்கள் நோக்கம், இஸ்ரேலியர் அல்லாத ஒரே முகம் மகாத்மா காந்தியுடையதுதான்''.

இவ்வாறு கிலாட் ட்ரார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அதிகாரிகளிடம் நேரில் பேசிய கிலாட் ட்ரார், ''எதிர்காலத்தில் இதுபோன்ற பிழைகள் ஏற்படாவண்ணம் மக்களின் உணர்வுகளை மனதில் வைத்துச் செயல்படுவோம்'' என்று உறுதியளித்துள்ளார்.

இஸ்ரேலின் 71-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் ஒரு பெட்டித் தொகுப்பில் சர்ச்சைக்குரிய பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் பல்வேறு வகையான பீர் பற்றிய ஐந்து வரலாற்றுத் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். நிழல்கோடுகளிடையே,  அலங்கரிக்கப்பட்ட டி ஷர்ட் அணிந்த காந்தியின் கார்ட்டூன் படமும் அதில் இடம் பெற்றிருந்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close