[X] Close

பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க நேட்டோ நட்பு நாடு அந்தஸ்து இந்தியாவுக்கு வழங்க சட்டம்: அமெரிக்க செனட் சபை ஒப்புதல்


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 08:39 am
  • அ+ அ-

இஸ்ரேல், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவுக்கு நேட்டோ நட்பு நாடு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு, அமெரிக்க செனட் (மேலவை) ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்தச் சட்டத் திருத்தம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மனிதாபிமான உதவி, பயங்கரவாத எதிர்ப்பு, கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பது மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

மேலும், இந்தச் சட்டம் நிறைவேறினால் இந்தியாவுக்கு அமெரிக்கா தாராளமாக ஆயுதங்கள் விற்பதற்கு வழி ஏற்படும். இதன் மூலம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.

தற்போது இந்தச் சட்டத்துக்கு செனட் ஒப்புதல் வழங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையும் ஒப்புதல் வழங்கிய பின்னர் சட்டமாக அறிவிக்கப்படும்.

இந்த சட்டத் திருத்த மசோதா ஆகஸ்ட் மாதம் மக்கள் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

என்டிஏஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு அதிகாரச் சட்டம், இந்திய - அமெரிக்க உறவை அதிகரிக்கும் நோக்கில் பிராட் ஷெர்மேன், ஜோ வில்சன், அமி பெரா, டெட் யோஹோ, ஜார்ஜ் ஹோல்டிங், ராஜா கிருஷ்ணமூர்த்தி உட்பட எம்.பி.க்கள் பலர் கடந்த வாரம் அறிமுகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close