[X] Close

ஹாங்காங்கில் வன்முறை: கண்டனம் தெரிவித்த கேரி லேம்


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 16:54 pm
  • அ+ அ-

ஹாங்காங்கில் திங்கட்கிழமை நடந்த கடும் வன்முறைச் சம்பவங்களுக்கு கேரி லேம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் சீனாவின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜூலை 1-ம் தேதி அந்நாட்டின் ஆண்டுவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் ஹாங்காங் தலைவர் கேரி லேம் கூறும்போது, ''இந்த வன்முறையை நினைத்து நான் கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறேன். நான் இரண்டு விதமான காட்சிகளைப் பார்க்கிறேன். இதில் ஒருபக்கம் ஆண்டு விழாவை முன்னிட்டு மக்கள் அமைதியாகப் பேரணி செல்கின்றனர். இதுதான் ஹாங்காங்கின் அமைதி மற்றும் ஒழுங்கு போன்ற முக்கியப் பண்புகளை முழுமையாக எதிரொலிக்கிறது.

ஆனால், மற்றொரு பக்கம் வன்முறை நடக்கிறது. போராட்டக்காரர்கள் சட்டப்பேரவைக் கட்டிடத்தை இடிக்கிறார்கள். இது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. ஏனென்றால் ஹாங்காங்கின் சட்டம் ஒழுங்கைத் தாண்டி உயர்ந்தது வேறொன்றுமில்லை'' என்றார்.

 

1.jpg

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது ஹாங்காங். பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்தச் சட்டத்திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.

ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங்கின் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். கடந்த  மாதம் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கடந்த வாரம் அறிவித்தார்.

எனினும் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு ஹாங்காங்கில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close