[X] Close

அமெரிக்க மோகத்தால் கலைந்து போன தந்தை, மகளின் கனவு


  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 07:41 am
  • அ+ அ-

அமெரிக்காவில் கை நிறைய சம்பாதித்து சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு சென்ற தந்தை, மகளின் கனவு மண்ணில் புதைந்துபோகியுள்ளது.

உலக வரலாற்றை மாற்றும் சக்தி சில புகைப்படங்களுக்கு உண்டு. கடந்த 1972-ம் ஆண்டில் வெளியான, வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துரைக்கும் சிறுமியின் புகைப்படம், அந்த போருக்கே முற்றுப்புள்ளி வைத்தது. அன்றைய அமெரிக்க தலைமை மனிதாபிமானத்துக்கு சிறிது மதிப்பளித்து போரை முடித்துக் கொண்டது. இன்றைய அமெரிக்க தலைமை மனிதாபிமானத்தை ஆழமாகப் குழிதோண்டி புதைத்து இறுதிச் சடங்கே செய்துவிட்டது.

கடந்த 12-ம் தேதி பெற்றோருடன் அமெரிக்காவில் நுழைய முயன்ற 6 வயது இந்திய சிறுமி குர்மீத் கவுர், அரிஸோனா பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்காமல் நாவறண்டு உயிரிழந்தாள். அவளது இறப்பின் வடு மறைவதற்குள் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரை சேர்ந்த தந்தையும் அவரது சின்னஞ்சிறு மகளும் அமெரிக்க கனவால் ஆற்றங்கரையில் சடலங்களாக கரைஒதுங்கியுள்ளனர்.

எல் சால்வடாரின் தலைநகர் சான் சால்வடாரை சேர்ந்தவர் ஆஸ்கர் ஆல்பர்டோ மார்ட்டின் ரமிரேஷ் (25). இவரது மனைவி டனியா வனீசா (21). இத்தம்பதியின் இரண்டு வயது மகள் வலேரியா.

சான் சால்வடாரில் உள்ள உணவகத்தில் ஆஸ்கர் பணியாற்றி வந்தார். அவரது மனைவி டனியா வனீசா அங்குள்ள சீன உணவகத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது ஆஸ்கரின் நீண்ட நாள் கனவு. ஆனால் அவரது ஊதியம், சாப்பாட்டுக்கே போதுமானதாக இல்லை.

அமெரிக்காவில் குடியேறி கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கணவனும் மனைவியும் திட்டமிட்டனர். அதற்காக கடந்த ஏப்ரலில் அவர்கள், அமெரிக்காவின் அண்டை நாடான மெக்ஸிகோவின் டபாசூலா நகரில் குடியேறினர். அங்குள்ள ஓர் உணவகத்தில் ஆஸ்கர் பணியாற்றினார். அதே பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் கோரி மனு அளித்தனர். அவர்களின் மனு கிணற்றில் போட்ட கல்லாக அடியில் தேங்கியது.

ஆற்றைக் கடக்க முடிவு

சட்டரீதியான கதவு திறக்காததால் கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைய ஆஸ்கர் திட்டமிட்டார். மெக்ஸிகோவின் மாதாமரோஸ் பகுதியில் ரியோ கிராண்டே ஆற்றைக் கடந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவுண்வில்லே நகரில் நுழைய இருவரும் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த 23-ம் தேதி ஆஸ்கரும் டனியா வனீசாவும் மகள் வலேரியாவுடன் ரியோ கிராண்டே ஆற்றங் கரைக்கு வந்தனர். முதலில் மகளை முதுகில் சுமந்தபடி ஆஸ்கர் ஆற்றைக் நீந்தி கடந்து அமெரிக்க எல்லையை வந்தடைந்தார். கரையில் மகளை வைத்துவிட்டு மனைவியை அழைத்து வருவதற்காக மீண்டும் நதியில் நீந்தினார்.

தந்தை தன்னை விட்டுச் செல்வதை பார்த்து கதறியழுத குழந்தை வலேரியா தட்டுத் தடுமாறி எழுந்து ஆற்றில் விழுந்தது. ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் குழந்தையை இழுத்துச் சென்றது. இதை பார்த்து திடுக்கிட்ட ஆஸ்கர் மகளை நோக்கி நீந்தினார். அவளை மீட்டு தனது டிசர்ட்டில் வைத்துக் கொண்டு கரையேற முயன்றார். ஆனால் இருவரையும் வெள்ளம் இழுத்துச் சென்றது. மறுமுனையில் பதற்றத்தில் பரிதவித்த டனியா வனீசா, கணவரும் மகளும் ஆற்றில் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றார்.

5f5cb6d0_P_237382_4_mr.jpg 

மெக்ஸிகோ போலீஸ்

உடனடியாக மெக்ஸிகோ போலீஸாரிடம் அவர் முறையிட்டார். ஒரு நாள் தேடுதலுக்குப் பிறகு கடந்த 24-ம் தேதி தந்தை, மகளின் உடல்களை போலீஸார் கண்டுபிடித்தனர். ஆற்றங்கரையில் இருவரும் தலைகுப்புற கவிழ்ந்து இறந்து கிடந்தனர். தந்தையின் டிசர்ட்டுக்குள் அவரின் கழுத்தை இறுக கட்டியணைத்தபடி குழந்தை வலேரியாவின் உயிர் பிரிந்திருந்தது.

அவர்களின் புகைப்படம் லா ஜார்னடா நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியாகியது. அடுத்த சில மணி நேரங்களில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆஸ்கரின் தாயார் ரோஸா கூறியபோது, "அமெரிக்காவுக்கு போக வேண்டாம் என்று எனது மகனிடம் மன்றாடினேன். அவன் கேட்கவில்லை. குழந்தையை என்னிடம் விட்டுச் செல்லுமாறு கூறினேன். அதையும் அவன் கேட்கவில்லை. மகளை பிரிய மனமில்லாமல் அவளையும் உடன் அழைத்துச் சென்றான். அவன் இறந்து கிடக்கும் புகைப்படத்தை பார்த்தாலே மகளை அவன் எந்த அளவுக்கு நேசித்தான் என்பது புரியும்" என்றார்.

மெக்ஸிகோ போலீஸார் கூறியபோது, "அமெரிக்க கனவோடு நூற்றுக்கணக்கானோர் ரியோ கிராண்டே ஆற்றை கடக்கின்றனர். இதில் பலர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர். இந்த சம்பவத்துக்குப் பிறகாவது மக்கள் விழிப்படைய வேண்டும்" என்று தெரிவித்தனர்.

பாலைவனத்தில் நாவறண்டு உயிரிழந்த இந்திய சிறுமி குர்மித் கவுர், தண்ணீரில் தத்தளித்து பலியான எல் சால்வடார் சிறுமி வலாரியாவின் மரணங்கள் அமெரிக்காவின் இரும்பு கதவை உடைத்து திறக்குமா என்ற கேள்வி உலகமெங்கும் எதிரொலிக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close