[X] Close
 

சர்ச்சையில் ஜான் மூரின் புகைப்படம்: தாயிடமிருந்து பிரிக்கப்பட்டாரா அந்த சிறுமி?


father-of-girl-on-time-cover-says-she-was-not-taken-from-mother

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Jun, 2018 11:37 am
  • அ+ அ-

கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது அமெரிக்க எல்லையில் கதறி அழும் சிறுமியின் புகைப்படம் ஒன்று. அகதியாக குடியேறுபவர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து அவர்களை முகாம்களில் தங்கவைப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்தான் புலிட்சர் விருது வென்ற ஒளிப்படக் கலைஞர் ஜான் மூர் எடுத்த அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது. பிங்க் நிற ஜாக்கெட் அணிந்த சிறுமி ஒருவர் கதறி அழுவதுபோல் அந்தப் புகைப்படம் இருந்தது.

அந்தப் புகைப்படம் குறித்து ஜான் மூர், "மிகச் சிறிய குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதும் குழந்தைகளின் ஓலமும் என் இதயத்தை நொறுக்கிவிட்டது. எல்லைப் பிரச்சினையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் சகிப்புத் தன்மையற்ற செயலை இது காட்டுகிறது. அம்மாவிடமிருந்து பிரிக்கப்பட்ட துயரத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளை என்னால் படம் பிடிக்கவே முடியவில்லை. அந்தக் குழந்தைகளின் அழுகை அசாதாரணமாக இருந்தது. பெற்றோரும் இனி எப்போது குழந்தைகளைப் காணப் போகிறோம் என்ற பயத்துடன் இருந்ததைப் பார்க்க முடிந்தது. பல ஆயிரம் மைல்கள் பயணம் மேற்கொண்டு, அடைக்கலம் தேடி வரும் மக்களை இன்னும் மோசமான துயரத்தில் தள்ளிவிடுகிறது ட்ரம்ப் அரசு. அங்கிருந்து வந்தபிறகே என்னால் மூச்சு விட முடிந்தது" எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையில் டைம் மேகசினின் முகப்பில் ட்ரம்ப் எதிரே அந்த சிறுமி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் வைரலான புகைப்படத்தைப் பற்றி சிறுமியின் தந்தை என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஹொண்டூராஸைச் சேர்ந்த டெனிஸ் வலேரா, "எனது மகள் அமெரிக்க எல்லையில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் குழந்தைகளின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறாள். அவளது புகைப்படம் ட்ரம்ப் மனதைக்கூட உலுக்கியிருக்கலாம். ஆனால் எனது மனைவியும் மகளும் டெக்சாஸ் எல்லையில்தான் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கே தஞ்சம்கோரி எனது மனைவி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் பிரிக்கப்படவில்லை" என்று தி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குக் கூறியுள்ளார். மேலும் தனது மகளின் புகைப்பட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்து மனமுடைந்து போனதாகவும் அவர் கூறியுள்ளார். வரேலாவின் வாதத்தை ஹொண்டூராஸ் வெளியுறவு அமைச்சர் நெல்லி ஜெரேஸும் உறுதி செய்துள்ளார். 

இறுதியாக சிறுமியின் தந்தை வரேலா, "எனது மனைவி மகளை அமெரிக்கா நாடுகடத்தினால்கூட பரவாயில்லை ஆனால் மகளை என் மனைவியிடமிருந்து பிரித்துவிட வேண்டும். அடுத்தது என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close