[X] Close
 

முதலை சவாரி போகலாமா!- சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆப்பிரிக்க கிராமம்


in-this-village-in-africa-you-are-welcome-to-sit-on-a-crocodile

  • பாரதி
  • Posted: 20 Jun, 2018 12:26 pm
  • அ+ அ-

ஏஎஃப்பி

குதிரை சவாரி, யானை சவாரி கேள்விப்பட்டிருக்கிறோம் முதலை சவாரி தெரியுமா உங்களுக்கு? ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாஸோவில் இந்தவகை சவாரி சற்று பிரபலமாகத்தான் இருக்கிறது. 

முதலைகள் அச்சுறுத்தும் வேட்டை மிருக வகையைச் சேர்ந்தது. ஆனால் பர்கினா ஃபாஸோவில் உள்ள பாஸோல் கிராமவாசிகளுக்கு முதலைகளைக் கண்டால் சிறிதும் அச்சமே இல்லையாம். வரிசையாக கூர்மையான பற்களுடன் தோற்றமளிக்கும் முதலைகள் மீது சிறுவர்கள் சர்வசாதாரணமாக சவாரி செய்கிறார்கள். 

பயமில்லையா என்று கேட்டால், "இந்த குளத்தில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கின்றன. நாங்கள் சிறுவயதிலிருந்தே இந்த முதலைகளைப் பார்த்து வருகிறோம். முதலைகள் உள்ள இந்த குளத்தில் நாங்களும் நீந்துகொறோம். இந்த முதலைகள் புனிதமானவை. இவை யாருக்கும் எந்த தீங்கும் செய்யாது" என்கிறார் ஒரு சிறுவர். அவர் இவ்வாறு கூறும்போதே கிராமவாசி ஒருவர் முதலைகளுக்கு கோழிகளை வழங்க முதலையின் முதுகில் ஏறிக் கொள்கிறார். "உங்களுக்கு துணிவு இருந்தால் நீங்களும் முதலை மீது ஏறிக்கொள்ளலாம்" என அழைப்புவிடுக்கிறார்.

நூற்றாண்டு பந்தம்:
உள்ளூர் பெரியவர் ஒருவர் முதலைகளுடனான கிராமவாசிகளின் பந்தத்தை எடுத்துரைத்தார். "இந்த பந்தம் 15-ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. அப்போது இந்த கிராமம் மிகக் கொடூரமான வறட்சியில் சிக்கியிருந்தது. அப்போது முதலைகள் சில கிராமப் பெண்களுக்கு குளத்திற்கு வழிகாட்டியுள்ளன. அதுவரை யாரும் அறியாத குளத்துக்கு முதலைகள் வழிகாட்ட கிராமமே தண்ணீர் பஞ்சத்திலிருந்து விடுபட்டது. இதனையடுத்து மக்கள் ஒன்றுதிரண்டு முதலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா எடுத்தனர்.

கூம் லாக்ரே என்பது முதலைகளுக்கு நன்றி சொல்லும் திருவிழாவின் பெயர். ஓவ்வோர் ஆண்டும் இந்தத் திருவிழாவின்போது கிராமவாசிகள் முதலைகளுக்கு பலி கொடுத்து வரம் கேட்பர். 

இந்த முதலைகள் எங்கள் மூதாதையர்களின் ஆன்மா. அவற்றில் ஏதாவது ஒன்று இறந்தால் முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்து புதைப்போம். அதேவேளையில் கிராமத்துக்கு ஏதாவது தீங்கு நேரப்போகிறது என்றால் இந்த முதலைகள் அழுது எச்சரிக்கும். முதலைகளின் அழுகையை ஆய்வு செய்து குறி கூறும் முதியவர்கள் சிலப் பரிகாரங்களையும் சொல்வர். அதற்கேற்ப கிராமமக்கள் முதலைகளிடம் நன்மைக்காக வேண்டிக்கொள்வர்" என்றார்.

படையெடுக்கும் சுற்றுலாவாசிகள்..
மனிதர்களுக்கும் முதலைகளுக்கும் இடையேயான இந்த அதிசய பந்தம் இந்த கிராமத்தை நோக்கி பல்வேறு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த கிராமத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வியாபாரிகளிடமிருந்து உரித்த கோழியை வாங்குகின்றனர். அதை ஒரு நீண்ட குச்சியில் மாட்டி குளத்திலிருக்கும் முதலைகளுக்கு வழங்குகின்றனர். சிலர் முதலைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close