[X] Close

சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஹாங்காங்கின் பிரம்மாண்ட பேரணி


  • kamadenu
  • Posted: 17 Jun, 2019 16:52 pm
  • அ+ அ-

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கச் செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணியாகத் திரண்டனர். இப்பேரணி சீனாவுக்கு எதிரான அம்மக்களின் எச்சரிக்கைக் குரலாக எதிரொலித்தது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது ஹாங்காங். பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில் சீனா ஹாங்காங்கில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் அவ்வப்போது அத்துமீறல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹாங்காங் மாணவர்களும், பொதுமக்களும் அவ்வப்போது போராட்டங்களை நடத்துவது தொடர்கதையாகி உள்ளது.

அவ்வாறு சமீபத்தில் ஹாங்காங் கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்துக்கு எதிராக மாணவர்களும், பொதுமக்களும் வழக்கம் போல் தன்னிச்சையாக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதில் போலீஸார் நடத்திய தாக்குதலில் மாணவர்கள், பொதுமக்கள் என 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதனால் ஹாங்காங்கில் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராகவும், கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்துக்கு எதிராகவும் ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில் மாணவர்கள், பொதுமக்கள் எதிர்க்கட்சிகள் என சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கருப்பு ஆடை அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் சனிக்கிழமை அறிவித்தார்.

இந்நிலையில் ஹாங்காங்கில் நடந்த பேரணியிலேயே மிகப்பெரிய பேரணியாக இது பதிவாகியுள்ளதாக ஹாங்காங் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தப் பேரணி ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவுக்கு அம்மக்கள் விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்கப்படுவதாக ஹாங்காங் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு எதிராக 2014-ம் ஆண்டில் ஹாங்காங்கில் அம்ப்ரெல்லா புரட்சியை தலைமையேற்று நடத்திய 22 வயதான மாணவர் ஜோஸ்வா வாங் 2 மாத சிறைதண்டனைக்குப் பிறகு திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டார். 

vcf.jpg 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close