[X] Close

கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவை நிறுத்திவைத்தது ஹாங்காங்: கடும் போராட்டத்துக்கு பணிந்தது அரசு


  • kamadenu
  • Posted: 16 Jun, 2019 07:28 am
  • அ+ அ-

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் அரசு நிறுத்திவைத்துள்ளது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது ஹாங்காங். பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியல் அமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், குற்றவாளிகளை பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்த சட்டத் திருத்த மசோதவை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.

ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டு கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.

இந்நிலையில், கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சட்டத் திருத்த மசோதாவை நிறுத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், சமூகத்தின் அனைத்து பிரிவினரின் கருத்துகளை மீண்டும் கேட்டு செயல்படுவோம். அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், பாதுகாப்பு குறித்து எங்கள் சட்டசபை கவுன்சில் உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்துவோம்’’ என்றார்.

சொந்த கட்சித் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் கேரி லேமை வலியுறுத்தியதால், சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில், போராட்டக்காரர்களுக்கு அடிபணியக் கூடாது என்று சொந்த கட்சிக்காரர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், ‘‘சட்டத் திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பது போதாது. அந்த மசோதாவை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்’’ என்று போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close