[X] Close

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இம்ரான்கானுடன் விருந்தில் வாழ்த்துக் கூட கூறவில்லை


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 10:24 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நேற்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியுடன், பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது ஆப்கானிஸ்தான் அமைதியும், வளர்ச்சியும் ஏற்பட இந்தியா அளித்து வரும் பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதுதவிர பார்வையாளர்களாக உள்ள ஆப் கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய 4 நாடு களின் தலைவர்களும் பங்கேற் கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் ஓமன், ஈரான் வான் வழியாக பிஷ்கெக் சென்றார்.

இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோருடன் பிரதமர் மோடி தனியாக சந்தித்துப் பேசினர்.

பாகிஸ்தானிலிருந்து ஏவப் படும் எல்லை தாண்டிய தீவிர வாதம் குறித்து ஜி ஜின்பிங்கிடம் கவலை தெரிவித்த  பிரதமர் மோடி தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த நாட்டுடன் பேச்சு வார்த் தையை தொடர முடியும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.

இந்தியா, சீனா இடையே 70 ஆண்டுகளாக ராஜாங்க ரீதியான உறவுகள் சிறப்பாக சென்றுள்ளதை முன்னிட்டு இரு நாடுகளும் தலா 35 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ள என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதியில் அதிகாரபூர்வமில்லாத சந்திப்பு நடத்தஇருக்கிறார்கள் அதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தானில் அமைதி உருவாகவும், பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் இந்தியாஅளி்த்து வரும் உதவிகள், பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், " நம்பிக்கைவாய்ந்த நண்பர் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு தலைவர்களும் தங்களின் எண்ணங்களையும், ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் பேசினர் " எனத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் இடையே கிரிஸ்தான் அதிபர் சூரன்பே ஜின்பெக்கோவ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடி பங்கேற்ற போதிலும், இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மரியாதை நிமித்தமாகக் கூட இரு தலைவர்களும் வாழ்த்துக்களைக் கூறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close