[X] Close

துபாய் சுற்றுலா பேருந்து விபத்தில் 12 இந்தியர் உட்பட 17 பேர் உயிரிழப்பு


12-17

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 08:13 am
  • அ+ அ-

துபாயில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று துபாய் வந்து கொண்டிருந்தது. ஓமன் அரசின் ‘மவுசலாத்’ தேசிய போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான அந்த பேருந்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 31 பயணிகள் இருந்தனர். துபாய் அல் ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் ஷேக் முகமது பின் ஜாயத் சாலையில் வியாழக்கிழமை மாலை 5.40 மணிக்கு பேருந்து சென்றது. அந்த சாலையில் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அது தெரியாமல் ஓட்டுநர் பேருந்தை ஒட்டிச் சென்றுள்ளார். அந்தச் சாலையில் உயரமான வாகனங்கள் செல்ல முடியாதபடி இரும்பு தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறைந்த உயரம் கொண்ட வாகனங்கள் செல்லும் சாலை (லோ கிளியரன்ஸ் சைன்)என்ற எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஓமன் பேருந்து உயரமானது என்பதால், அந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் இடதுபுற இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓட்டுநர் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து துபாய் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘விபத்தில் உயிரிழந்தவர்களில் சில உடல்கள் அடையாளம் காண முடியவில்லை. அதனால் விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்’’ என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

துபாயில் உள்ள இந்திய துணை தூதர் விபுல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘துபாய் விபத்தில் இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்பதை மிகுந்த சோகத்துடன் தெரிவிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:ரஷிதியா போலீஸ் நிலைய அதிகாரிகள், பிணவறை பொறுப்பாளர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இறந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். விரைவில் நடைமுறைகளை முடித்து உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விபுல் கூறினார்.

அத்துடன் இறந்தவர்களின் பெயர்களையும் இந்திய துணைத் தூதர் விபுல் வெளியிட்டார். அதில், விக்ரம் ஜவகர் தாக்குர், விமல் குமார் கார்த்திகேயன் கேசவபிள்ளைகார், கிரண் ஜானி ஜானி வல்லிதோட்டத்தில் பைலி, பெரோஸ் கான் ஆசிஸ் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், ஜமாலுதீன் அரக்கவீட்டில், வாசுதேவ் விஷான்தாஸ், ராஜன் புதியபுரயில் கோபாலன், பிரபுல மாதவன் தீபா குமார், ரோஷ்னி மூல்சந்தானி, உம்மர் மமூத் புதென், நபில் உமர் ஆகியோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்கள் அறிய +971-565463903 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close