[X] Close

கிம் - ட்ரம்ப் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறுவது ஏன்?


white-house-explains-why-it-chose-singapore-to-host-summit-with-north-korea

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jun, 2018 16:18 pm
  • அ+ அ-

ஜூன் 12-ம் தேதி வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அன்றைய தினம் தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சந்திக்கவிருக்கின்றனர்.

அடுத்தடுத்த அணுஆயுத சோதனைகளால் அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த வடகொரிய அதிபர் கிம் திடீரென புத்தாண்டு பேச்சின் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் இட்டார். ஆரம்பத்தில் கிம்முக்கு கெடுபிடிகள் விதித்த அமெரிக்கா பின்னர் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துவிட்டது.

இடையில் ஒருமுறை பேச்சுவார்த்தை ரத்து என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தாலும்கூட மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டார். 

பல்வேறு இடையூறுகளைத் தாண்டி நடைபெறவுள்ள இந்த சந்திப்புக்கு பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஸ்விட்சர்லாந்து, மங்கோலியா, வடகொரியா - தென் கொரியாவின் ராணுவ கண்காணிப்பு அற்ற பிரதேசம் எனப் பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், கடைசியில் முடிவு செய்யப்பட்டது என்னவோ தென்கிழக்கு ஆசியாவின் ஒரு சிறிய தீவுதேசமான சிங்கப்பூர்.

இத்தனை நாடுகளையும் விடுத்து சிங்கப்பூர் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருக்கிறது.

சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட முக்கியக் காரணம் அமெரிக்கா, வடகொரியா என சம்பந்தப்பட்ட இரு நாடுகளுடனும் சிங்கப்பூர் ராஜாங்க ரீதியாகக் கொண்டுள்ள நட்புறவு. இதன் அடிப்படையில் சிங்கப்பூர், வரலாற்று சிறப்புமிக்க ட்ரம்ப் - கிம் சந்திப்பை தனது நாட்டில் நடத்த விருப்பமும் தெரிவித்திருந்ததாம்.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வெறும் 5.6 மில்லியன் மட்டுமே. சிங்கப்பூர் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய மாநாடுகளைத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறது. கடந்த 2015-ல் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தாய்வான் அதிபர் மா ஜிங் ஜியோவும் சந்தித்துக் கொண்டது சிங்கப்பூரில்தான்.
சிங்கப்பூரில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அவ்வளவு சுலபமல்ல. போலீஸ் அனுமதியின்றி மக்கள் போராட்டங்களை நடத்திவிட முடியாது. அதுமட்டுமல்லாமல் ஒருவேளை போலீஸ் அனுமதி வழங்கினாலும்கூட ஸ்பீக்கர்ஸ் கார்னர் என்ற பகுதியில் உள்ள மைதானத்தில் மட்டும்தான் போராட்டம் நடத்த முடியும். வெளிநாட்டவர்கள் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ள முடியாது. இப்படி பல கெடுபிடிகள் இருக்கின்றன.
இதன் காரணமாகவும் சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப் - கிம் சந்திப்பு சென்டோசா தீவுகளில் திட்டமிடப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரின் பிரதான தீவுக்கு மிக அருகிலேயே இருக்கிறது. மிகவும் பாதுகாப்பான இடமாக இருப்பதால் சென்டோசா தீவு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close