[X] Close

சிக்கன நடவடிக்கை: பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் தொகையை தாமாக முன்வந்து குறைத்த பாகிஸ்தான் ராணுவம்


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 13:58 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களில் பாகிஸ்தான் அரசு சிக்கி இருக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தொகையை தாமாக முன்வந்து பாகிஸ்தான் ராணுவம் குறைக்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ராணுவ மேஜர் ஜெனரல் ஆஷிப் கபூர் ட்விட்டரில் பதிவிடுகையில், "பாகிஸ்தான் ராணுவம் தாமாக முன்வந்து அடுத்த நிதியாண்டுக்கான  பட்ஜெட் தொகையைக் குறைத்துள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் விஷயத்தில் எந்தவிதமான நிதிக்குறைப்பும் இல்லை. அனைத்துவிதமான மிரட்டல்களுக்கும் நாங்கள் வழக்கம்போல் பதிலடி கொடுப்போம். ஆனால், நிர்வாக ரீதியான செலவுகள், உள்ளீட்டு செலவுகள் ஆகியவை குறைக்கப்படும். இதன் மூலம் சேமிக்கப்படும் பணம் பழங்குடியினப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

ஆனால், எந்த அளவுக்கு பட்ஜெட் குறைப்பு இருக்கும் என்பதை கபூர் தெரிவிக்கவில்லை.

பிரதமர் இம்ரான் கான் அளித்த பேட்டியில், "நாடு பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சவால்களைச் சந்தித்து வந்தபோதிலும், நாட்டின் நிதிச்சூழலை அறிந்து பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது வரவேற்கக் கூடியது.

ராணுவத்தின் சிக்கன நடவடிக்கை மூலம் சேமிக்கப்படும் நிதி பலுசிஸ்தான் பழங்குடி பகுதிகளில் உள்ள மக்களின் மேம்பாட்டுக்கு செலவு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அவர் பதவி ஏற்றதில் இருந்து அரசின் நிதிச்சூழலை அறிந்து பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்ந்த சொகுசு வீடுகள், கார்கள் அனைத்தையும் விற்பனை செய்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய மாளிகையை விடுத்து, சாதாரண 3 படுக்கை அறைகள் கொண்ட வீட்டுக்கு இம்ரான் கான் குடிபெயர்ந்தார். அங்கு பணியாட்களையும் குறைத்து 2 பேரை மட்டும் பணிக்கு வைத்துள்ளார் இம்ரான் கான்.

பாகிஸ்தான் அரசின் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 11-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் சிக்கன நடவடிக்கை எடுத்து தங்களின் பங்களிப்பை அளித்திருக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close