[X] Close

தியானன்மென் சதுக்க படுகொலை நினைவுநாள் யார் அந்த ‘டேங்க் மேன்’?


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 08:02 am
  • அ+ அ-

சீனாவில் ஜனநாயக ஆட்சி கோரி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் இணைந்து கடந்த 1989-ம் ஆண்டில் அறவழியில் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கினர். தலைநகர் பெய்ஜிங் உட்பட 400-க்கும் மேற்பட்ட நகரங்களில் அந்த ஆண்டின் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

ஜனநாயக போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய தலைவர்களும் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களும் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் குழுமியிருந்தனர். இரவும் பகலுமாக சுமார் 50 நாட்கள் அவர்கள் அங்கேயே முகாமிட்டிருந்தனர். ஜூன் 3-ம் தேதி இரவு தியானன்மென் சதுக்கத்தை ராணுவம் திடீரென சுற்றிவளைத்தது.

டாங்கிகள், துப்பாக்கிகள் மூலம் ராணுவ வீரர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அடுத்த நாள் காலை வரை ராணுவம் கோரத்தாண்டவமாடியது. இதில் 200 பேர் பலியானதாக சீன அரசு கூறியது. ஆனால் 10,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் புல்டோசர்கள் மூலம் அள்ளப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

வெறிச்சோடிய தியானன்மென் சதுக்கத்தில் மக்களை அச்சுறுத்த ஜூன் 5-ம் தேதி ஏராளமான டாங்கிகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வெள்ளை சட்டை, கருப்பு கால்சட்டை, இரண்டு கைகளிலும் பைகள் என சாமானிய மனிதர் ஒருவர் ராணுவ டாங்கிகளை வழிமறித்து நின்றார். துளியும் பயமோ, பதற்றமோ இன்றி டாங்கிகள் முன்னேறி செல்லவிடாமல் இரு கைகளையும் நீட்டி தடுத்தார்.

முதலில் நின்ற டாங்கி வலது, இடது புறமாக விலகி செல்ல முயன்றபோது அங்கும் இங்கும் ஓடி அதனை வழிமறித்தார். ஒரு கட்டத்தில் டாங்கியின் மீது ஏறி அதனுள் இருந்த வீரரை எச்சரித்தார். கடைசியில் சீருடை அணியாத போலீஸார், அந்த மனிதரை வலுக்கட்டாயமாக பிடித்து, இழுத்துச் சென்றனர்.

அருகில் உள்ள ஓட்டலில் பதுங்கியிருந்த ஏ.பி நிறுவன புகைப்பட பத்திரிகையாளர் ஜெப் வைடனர், 6-வது மாடியில் இருந்து இந்த நிகழ்வை படம் பிடித்தார். சீன ராணுவ கெடுபிடிகளை தாண்டி உலகம் முழுவதும் முன்னணி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் அந்த புகைப்படம் வெளியானது.

சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த நிகழ்வை வீடியோவில் பதிவு செய்து ஒளிபரப்பின. அந்த வெள்ளை சட்டை மனிதர் யார்? அவருக்கு என்ன நேர்ந்தது? அவர் உயிரோடு இருக்கிறாரா, கொல்லப்பட்டாரா? இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால் உலகம் முழுவதும் ‘டேங்க் மேன்' என்ற அடைமொழியில் அவர் இன்றளவும் நினைவுகூரப்படுகிறார்.

சீனாவில் ‘டேங்க் மேன்' தொடர்பான புகைப்படம், வீடியோக்கள், தகவல்கள் ஊடகங்கள், இணையதளங்களில் வெளியாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களிலும் அவரைக் குறித்து எந்த தகவலையும் பகிர முடியாது. டேங்க் மேனை நினைவுகூரும் வகையில் பிரச்சாரம் செய்தாலோ, பொருட்களை விற்றாலோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

தியானன்மென் சதுக்க போராட்ட நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டதால் சர்வதேச ஊடகங்களில் ‘டேங்க் மேன்' மீண்டும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் சீனாவை பொறுத்தவரை அவரது நினைவுகள் கூட அழிக்கப்படுகின்றன. சீன அரசுக்கு பணிந்து கூகுள், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ‘டேங்க் மேன்' குறித்த செய்திகள், தகவல்களை தணிக்கை செய்கின்றன. தியானன்மென் சதுக்க போராட்டத்தில் பங்கேற்ற யாங் ஜியான்லீ தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில் டேங்க் மேனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த தகவல்களை வெளியிடும்படி கோரியுள்ளார்.

இதுகுறித்து யாங் ஜியான்லீ கூறியபோது, "டேங்க் மேன் என்ன ஆனார் என்பது சீன அரசுக்கு மட்டுமே தெரியும். அவரைக் குறித்த உண்மைகளை அந்த நாட்டு அரசு வெளியிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தியானன்மென் சதுக்க படுகொலையை போன்று ‘டேங்க் மேன்' விவகாரத்தில் தற்போது தகவல் தொழில்நுட்ப படுகொலையை சீன அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் சீன மக்களின் மனதில், உலக மக்களின் நினைவில் ‘டேங்க் மேன்' இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close