[X] Close

இந்திய தூதரகம் சார்பில் நடந்த இப்தார் விருந்துக்கு வந்தவர்களை அவமதித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம்


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 07:57 am
  • அ+ அ-

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற இப்தார் விருந்துக்கு வந்தவர்களை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் 1-ம் தேதி இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செரினா ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய தூதர் அஜய் பிசாரியா செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த விருந்தில் அந்நாட்டு அதிபரோ, பிரதமரோ பங்கேற்கவில்லை. அதேநேரம் விருந்தில் பங்கேற்க வந்த மற்ற முக்கிய பிரமுகர்களிடம் முன் எப்போதும் இல்லாத வகையில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கெடுபிடி காட்டி அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் பல விருந்தினர்களின் காரை இடைமறித்து திருப்பி அனுப்பி உள்ளனர்.

வழக்கத்துக்கு மாறாக நிகழ்ச்சி நடைபெற்ற ஓட்டலைச் சுற்றிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு கெடுபிடி காரணமாக இந்த விருந்தில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டதாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் பிசாரியா பேசும்போது, “உங்களில் சிலர் சிரமப்பட்டு இங்கு வந்துள்ளீர்கள். மேலும் சிலர் விருந்தில் பங்கேற்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர். இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இந்நிலையில், இந்தியா சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இப்தார் விருந்துக்கு வந்தவர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அவமதித்துள்ளனர். சிலரை திருப்பி அனுப்பி உள்ளனர். பாகிஸ்தானின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, விருந்துக்கு வந்த தூதரக அதிகாரிகளை அவமதித்தது, தூதரக விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். இருதரப்பு உறவை மேலும் பாதிக்கும் வகையில் அதிகாரிகள் நடந்துகொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு உடனடியாக விசாரணை நடத்தி, இதுதொடர்பான அறிக்கையை இந்திய தூதரகத்தில் வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close