[X] Close

பாலியல் குற்றங்களைத் தடுக்க முயற்சி: வங்கதேசத்தில் இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு


  • kamadenu
  • Posted: 30 May, 2019 18:28 pm
  • அ+ அ-

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக அரசு உதவி பெறும் இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் 19 வயதான நஸ்ரத் ஐகான் ரஃபி என்ற பெண் தனது ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடுத்திருக்கிறார். இதில் அப்பெண் வழக்கை திரும்பப் பெறுமாறு அந்த ஆசிரியர் தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்கடிகொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நஸ்ரத் புகாரை வாபஸ் பெறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியர் நஸ்ரத் வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால், அவரைக் கொலை செய்யும்படி ஆட்களை அனுப்பினார். அதன்படி கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நஸ்ரத் வழக்கை வாபஸ் வாங்க மறுத்தததால் அவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டார். இதில் 80% தீ க்காயம் அடைந்த நஸ்ரத் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் 17 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நஸ்ரத்தைக் கொலை செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும்படி வங்கதேசம் முழுவதும் தொடர் போராட்டங்களை பெண் அமைப்புகள் நடத்தின.

இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக அரசு நிதியுதவி பெறும் இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் பெண் ஆசிரியர்களை  நியமிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வங்கதேச கல்வி வாரியத் தலைவர் சைஃப் உல்லாஹ் ஊறும்போது, ''மாணவிகள் அனைவரும் பெண் ஆசிரியர்கள் மூலமே தங்களது தலைமைக் கல்வி நிர்வாகத்தை எதிர்கொள்வார்கள்'' என்று தெரிவித்தார்.

மேலும், பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கமிட்டி ஏற்படுத்த வேண்டும் என்றும் வங்கதேசம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி எரித்துக் கொல்லப்பட்ட  மாணவி நஸ்ரத்தின் மரணம் வங்கதேசத்தில் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான அழுத்தத்தை  அந்நாட்டுக்கு அளித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close