[X] Close

தியான்மென் சதுக்கத்தையும் டேங்க் மேனையும் தெரிந்து கொள்ளுங்கள்..


chinese-citizens-remember-tiananmen-tank-man

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jun, 2018 15:32 pm
  • அ+ அ-

உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் இன்று நிச்சயமாக அந்த மனிதரை நினைவுகூர்வார்கள். ஆம், இன்று தியானன்மென் சதுக்கப் படுகொலையின் 30-வது நினைவு நாள். இன்று அவரை நினைவுகூராமல் எப்படி அவர்களால் இருக்கமுடியும்?

1989-ல் இதே ஜூன் 4-ல் தான் அந்தப் படுகொலை சம்பவம் அரங்கேறியது. சீனாவில் ஜனநாயக ஆட்சி கோரி ஒன்று திரண்ட மக்களையும் மாணவர்களையும் ராணுவப் படைகள் சுட்டுக் குவித்தது இந்த நாளில்தான். சுமார் 800 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றன சில வரலாற்றுக் குறிப்புகள். தியான்மென் சதுக்கத்தில் குவிந்திருந்த சடலங்களை புல்டோசர்கள் மூலம் சீனப் படைகள் அப்புறப்படுத்தியதாக கோரப் பதிவுகளும் வரலாற்றில் இருக்கிறது.
தியான்மென் படுகொலையை நினைவுகூரும் அதேவேளையில் டாங்க் மேனை நாம் மறந்துவிட முடியாது.

யார் இந்த டாங்க்மேன்?
தியான்மென் படுகொலைக்குப் பின்னர், அடுத்த நாளே அதாவது ஜூன் 5-ம் தேதி சீனத் தலைநகர் பீஜிங்கில் அணிவகுத்துவந்த ராணுவ டாங்குகள் முன்னாள் ஒரு நபர் துணிச்சலாக வந்து நின்றார். வெள்ளைச் சட்டை, கருப்புக் கால்சட்டை, கையில் இரண்டு பைகள் என சாதாரண தோற்றத்துடன் ராணுவ டாங்கை தடுத்து நின்றவர்தான் இந்த டேங்க் மேன். 
அவர் ராணுவ டேங்குகளை வழிமறித்த காட்சி செய்தி ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டது. சற்றும் பதற்றமே இல்லாத அந்த நபர் நீண்டு அணிவகுத்துவரும் டேங்குகள் முன்னால் வந்து நிற்பார். அப்போது அந்த டேங்க் அவரைச் சுற்றிச் செல்ல முயலும். மீண்டும் அவர் பாதையை முடக்குவார். இடதுபுறம் திரும்ப முயன்றால் இடப்பக்கமும் வலதுபுறம் திரும்ப முயன்றால் வலப்பக்கமும் அவர் வழியை மறிப்பார். பின்னர் டேங்கின் மேல் ஏறி ராணுவ வீரர்களுடன் பேசுவார். பின்னர் அவர் கீழே இறங்க எங்கிருந்தோ வரும் இருவர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவர். அதன்பின் அந்த டேங்க்மேனுக்கு என்ன ஆனது. அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லை கொல்லப்பட்டாரா? என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை. ஆனால், டேங்க்மேன் என்ற அடைமொழியில் இன்றளவும் நினைவு கூரப்படுகிறார்.

டேங்க்மேனை நினைவுகூறும் வகையில் சமூகவலைதளங்களில் #Tankman2018 #Tankmen2018 ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ர்ண்டாகின்றன. சீனாவின் மிகப்பிரபலமான கார்ட்டூனிஸ்ட் படிவுகோ இந்த ஹேஷ்டேகுகளின் கீழ் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். "டேங்க் மேனை நினைவு கூருங்கள். இன்றைய சீன இளைஞர்களிடம் இல்லாத நம்பிக்கையையும், பொறுப்புணர்ச்சியையும், தீரா ஆர்வத்தையும், கருத்தியலையும் டேங்க் மேன் பெற்றிருந்தார். ஒரு தனி நபரால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நிரூபித்தவர் அவர்" என அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்றைய தினம் டேங்க்மேனை நினைவுகூரும் வகையில், சீனர்கள் வெள்ளைச் சட்டை, கருப்பு கால்சட்டை, இரண்டு பைகளுடன் ஒரு ஃபோட்டோ எடுத்து பகிருமாறு வலியுறுத்தியுள்ளார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close