[X] Close

மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்காத இந்தியா: உள்ளூர் அரசியல் என பாகிஸ்தான் சாடல்


  • kamadenu
  • Posted: 28 May, 2019 14:03 pm
  • அ+ அ-

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு எங்களை அழைக்காதது இந்தியாவின் உள்ளூர் அரசியல் தான் காரணம் என பாகிஸ்தான் ஆதங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது ‘சார்க்' நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அன்றைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க ‘பிம்ஸ்டெக்' நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் அமைப்பில் வங்கதேசம், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் வங்கதேசத்தை தவிர்த்து இதர நாடுகளின் தலைவர்கள் விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது. எதிர்பார்த்தது போலவே அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் பாகிஸ்தானில் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. பாகிஸ்தானை இந்தியா புறக்கணிப்பதாகவும், சர்வதேச அளவில் ராஜதந்திரம் தோல்வியடைந்து விட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் பாகிஸ்தன் அரசை சாடியுள்ளன.  

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறுகையில் ‘‘இந்தியாவுடனான பிரச்சினைகள் அனைத்தையும் பேசி தீர்க்கவே விரும்புகிறோம். காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க எண்ணுகிறோம்.

ஆனால் இந்தியாவில் மக்களவைத் தேர்தலின்போதே பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தை முன் வைத்தார். அவரது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அழைக்காததற்கு உள்ளூர் அரசியலே காரணம். எதிர்காலத்தில் நிலைமை சீரடையும் என நம்புகிறோம்’’ எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close