[X] Close

இந்தோனேஷியாவில் நடந்த தேர்தல் கலவரம்


  • kamadenu
  • Posted: 28 May, 2019 07:18 am
  • அ+ அ-

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி,

இந்தோனேஷியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட அங்கு, இந்தியாவை போல் ஏழு கட்டங்களாக ஒன்றரை மாதம் தேர்தல் நடக்கவில்லை. ஒரே நாளில் நடந்து முடிந்திருக்கிறது. 26.10 கோடி மக்கள் தொகையில் 19 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற மிகப் பெரிய தேர்தல் இது. அதிபர், நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளுக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவித்ததும் கலவரம் ஆரம்பித்து விட்டது. எதிர்க்கட்சிகள் தாங்கள் வெற்றி பெற்றதாகவும் தேர்தலில் ஆளுங்கட்சி முறைகேடு செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

தலைநகர் ஜகர்த்தாவிலும் அதையொட்டிய பகுதிகளிலும் நடந்த கலவரங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஏகப்பட்ட பேர் காயமடைந்துள்ளனர். போராட்டக் காரர்கள் போலீஸ் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என போலீஸ் மறுத்தாலும், குண்டடிபட்டவர் களைக் காட்டி, போராட்டக்காரர்கள் போலீஸ் மீது குற்றம் சாட்டுகின் றனர். ஆனால் இது குறித்து விசா ரணை நடத்தத் தயாராக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஜகர்த்தாவில் தொடர்ந்து பல நாட்கள் பதற்றம் நிலவி வந்தா லும், தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பல இடங்களில் கலவரம் வெடித்தது. அதிபர் ஜோகோ விடோடோ, 55.5 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் இந்த முடிவுகளை ஏற்க, எதிர்த்துப் போட்டியிட்ட சிறப்புப் படையின் முன்னாள் கமாண்டர் பிரபோவோ சுபியண்டோ மறுத்துவிட்டார். ஆனால், தனது புகாரை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரங்களையும் சுபியண்டோ காட்டவில்லை என தேர்தல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

கலவரத்தை அடக்கி இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வர அரசு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில், சுபியண்டோ தேர்தல் முடிவுகளை ஏற்காமல் புகார் கூறுவது இது முதன்முறையல்ல எனக் கூறுகிறார்கள் பார்வையாளர்கள். 1998-ல் அதிபராக இருந்த சுகார்ட்டோ விலகிய பிறகு, நான்கு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார் இவர். கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், சுகார்ட்டோவின் ஆதரவாளர். தேர்தலில் தான் வெற்றி பெற்றுள்ளதாகவும் தனது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடு படாமல் பொறுமை காக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பொய்ச் செய்திகள் மூலம் கலவரம் அதிகரிப் பதை உணர்ந்த அரசு, ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போட்டோவையோ, வீடியோவையோ யாருக்கும் யாரும் பகிர முடியாதபடி கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன் மூலம் போலி செய்திகள் பரவி, கலவரம் அதிகரிக்காமல் தடுக்க முடியும் என அரசு அறிவித்துள்ளது.

‘`நாட்டின் முன்னேற்றத்துக்காக யாருடன் வேண்டுமானாலும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நாட்டின் பாதுகாப்புக்கும் ஜன நாயக நடைமுறைக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் எதிராக யார் செயல் பட்டாலும் அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன்’' என அதிபர் விடோடோ கூறியிருக்கிறார். இதன்மூலம், கலவரத்தை அடக்கி, இயல்பு நிலையைக் கொண்டு வருவதாக நாட்டு மக்களுக்கு உறுதி அளித்திருக்கிறார் அவர். உலகிலேயே மிகப் பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேஷியா, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் முக்கியமான நாடாகும். இதன் பொருளாதார வளர்ச்சியும் வளர்ச்சிக்கான வாய்ப்பும் இந்த பிராந்தியத்திலும் அதைத் தாண்டியும் பெரிதும் மதிக்கப்படுகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மோசமான கலவர நிலைமை காரணமாக அதிபர் விடோடோவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

`‘அதிபருக்கு எதிராக போராட்டத்திலும் கலவரத்திலும் ஈடுபட்டு வருபவர்கள் ஒரு குறிப்பிட்ட சிறு பிரிவினர்தான்'’ என சிங்கப்பூரில் உள்ள ராஜரத்தி னம் ஸ்கூல் ஆப் இன்டர் நேஷனல் ஸ்டடீஸ் நிறுவனத்தின் அலெக்ஸாண்டர் அரிஃபாண்டோ கூறியிருக்கிறார். ‘`பெரும்பான்மை யான மக்கள் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு விட்டனர். போராட்டக்காரர்களுக்கு மறைமுக மாக தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதன் மூலம் பிரபோவோ தனது உண்மையான முகத்தைக் காட்டி வருகிறார்'’ என்றும் அரிஃபாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் அடுத்து வரும் சில நாட்கள் பதற்றம் நிறைந்தவையாகவே இருக்கும். அங்கு ஏற்படும் ஸ்திரமற்ற நிலை இந்தோனேஷியாவில் மட்டுமல்லாது தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கே பாதிப்பாக அமைந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close