[X] Close

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமைச்சர், மேயர் உட்பட தலைவர்கள் பாராட்டு: இந்திய தேர்தல் உலகத்துக்கே ஊக்கமளிக்கிறது


  • kamadenu
  • Posted: 27 May, 2019 07:30 am
  • அ+ அ-

‘‘இந்திய தேர்தல் உலகத்துக்கே ஊக்கசக்தியாக விளங்குகிறது’’ என்று அமெரிக்க தலைவர்களும், எம்.பி.க்களும் வியந்து கூறியுள்ளனர்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக நடத்தப்படு கிறது. அரசியல் கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள், அனல் பறக்கும் பிரச்சாரங்கள், ஊர்வலங்கள், வாக்குப் பதிவு அன்று வரிசையில் காத்திருக்கும் மக்கள், வாக்கு எண்ணிக்கை அன்று பரபரப்புடன் காணப்படும் மக்கள் என இந்தியத் தேர்தல் உலகின் கவனத்தை எப்போதும் ஈர்த்து வருகிறது.

அதனால், ‘தேர்தல் சுற்றுலா’ என்ற பெயரில் வெளிநாட்டினருக்காக சிறப்பு ஏற்பாடுகளையும் பல நிறுவனங்கள் செய்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பயண ஏற்பாட்டாளர்கள் பலர், ‘தேர்தல் சுற்றுலா’ திட்டத்தை அறிவித்து பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைக்கின்றனர். அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நாட்டு பயணிகளும் இந்தியாவுக்கு வந்து தேர்தல் நடைமுறைகளைப் பார்த்து வியந்து செல்கின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சார கூட்டங்கள், ஊர்வலங்கள், வேட்பாளர்களுடன் சந்திப்பு, வாக்காளர்களுடனான உரையாடல் என பல அம்சங்களுடன் இருப்பதால், தேர்தல் சுற்றுலாவுக்கு வெளிநாட்டினர் பலரும் வருகின்றனர். இப்படிப்பட்டட மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை அமெரிக்க தலைவர்களும் எம்.பி.க்களும் ஆச்சரியத்துடன் பாராட்டி உள்ளனர். இந்தத் தேர்தலில் 303 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதற்காக பாஜக.வுக்கும், பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட உலக நாட்டின் தலைவர்கள் பலரும்பிரதமர் மோடிக்கு ட்விட்டரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் இந்தி யாவில் நடக்கும் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் உலக நாடுகளுக்கு எல்லாம் ஊக்கசக்தியாக விளங்குகிறது என்று அமெரிக்க தலைவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடான இந்தியா, நண்பர் பிரதமர் நரேந்திர மோடி, அவர் சார்ந்துள்ள பாஜக.வின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள். ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உணர்வை பலமாக எடுத்துக்காட்டும் செயல்பாடாக இந்திய தேர்தல் உள்ளது. பிராந்திய பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இந்தியத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் வாழ்த்துகள். அதேபால் வரலாற்று சாதனை படைக்கும் அளவுக்கு வாக்களித்த இந்தியவாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். ஜனநாய கத்தில் உலகிலேயே மிகப்பெரிய அளவில் நடக்கும் இந்திய தேர்தல், உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் உந்துசக்தியாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் மார்கன் ஆர்டாகஸ் செய்தியாளர்களுடன் நடத்திய அதிகாரப்பூர்வ மற்ற உரையாடலின் போது கூறியதாவது: ஜனநாயகத்தில் இந்தியத் தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய செயல்பாடாகும். இந்தியாவில் 90 கோடி வாக்காளர்கள் வாக்க ளிப்பதற்காக தேர்தல் நடத்தி முடிப்பது மிக அற்புதம். இந்திய தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிக எண்ணிக்கையில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளதை பாராட்டுகிறோம்.

சுமார் 60 கோடி மக்கள் (66 சதவீதம்) வாக்களித்துள்ளனர். இதை அற்புதமானதாக நினைக்கிறேன். அசாதாரணமான ஒரு தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த இந்திய அரசையும் நாங்கள் பாராட்டுகிறோம். பல துறைகளில் அமெரிக்காவின் மிக முக்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக தீவிரவாத ஒழிப்பு விஷயத்தில் இரு நாடுகளும் முக்கிய பணியாற்றி வருகின்றன என்றார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறும்பாது, ‘‘கோடிக்கணக்கான இந்திய மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களித்ததை பார்ப்பதுஉண்மையிலேயே ஊக்கமாக இருந்தது. அமெரிக்க - இந்திய உறவை வலுப்படுத்த பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதற்காக காத்திருக்கிறேன்’’ என்றார்.

அமெரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் இந்திய அமெரிக்க எம்.பி. ரோ கண்ணா கூறும்போது, ‘‘மோடியின் வெற்றி மூலம் ஒரு பாடம் என்னவென்றால், வாரிசு அரசியலும், பல ஆண்டுகளாக அரசியலில் ஊறிய வேட்பாளர்களும் வலுவிழந்துவிட்டனர் என்பதுதான். எனவே, அதிபர் ட்ரம்ப்புக்கு எதிரான நமது வேட்பாளர், அமெரிக்க மக்களின் ஏமாற்றங்கள் அதிருப்திகளை உணர்ந்தவராக மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டவராக இருப்பதை ஜனநாயகக் கட்சி உறுதி செய்ய வேண்டும். அத்துடன் அமெரிக்காவின் மாற்றத்துக்கு சாதகமான தொலைநோக்கு பார்வை கொண்ட வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதை ஜனநாயகக் கட்சி உறுதிப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

(அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சியின் தற்போதைய அதிபர் ட்ரம்ப், 2-வது முறையாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிரான ஜனநாயக கட்சி வேட்பாளர், மோடியைப் போல மக்களுடன் தொடர்புள்ளவராக, மாற்றத்தை மக்கள் மனதில் விதைப்பவராக இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க எம்.பி. ரோ கண்ணா மறைமுகமாகக் கூறியுள்ளார்.)இவர்களைப் போலவே அமெரிக்காவின் எம்.பி.க்கள் பலரும் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் டர்னெர், மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், டெக்ஸாஸ் நகரத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறும்போது, ‘‘ஹூஸ்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பலமான உறவு, கூடுதலான வர்த்தக உறவு, மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது உட்பட பல துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அதேபோல் டெக்ஸாஸ் ஆளுநர் கிரெக் அபாட், மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தன் கைப்பட எழுதிய கடிதத்தை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்த்தன் ஷிரிங்லாவிடம் கொடுத்துள்ளார். அதில், ‘‘மோடியை மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுத்திருப்பது இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தலை உலக நாடுகள் வியப்புடன் பார்ப்பதற்கு காரணங்கள் உள்ளன..

தற்போது நடந்து முடிந்தது 17-வது மக்களவைக்கான தேர்தல்.

இதில் 90 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். புதிய வாக்காளர்கள் எண் ணிக்கை இந்த முறை அதிகம். தேர்தலுக்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாராக இருந்தன. அத்துடன் எல்லா வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் விவிபாட் இயந்திரங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டன.

தேர்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை செய்தனர். பாதுகாப்புக்காக லட்சக்கணக்கான துணை ராணுவப் படை வீரர்கள், போலீஸார், ஊர்க்காவல் படையினர் உட்பட ஏராளமானோர் இரவு பகலாக வேலை செய்தனர். சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தலுக்கு செல விடப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தின் போது தலைவர்களின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வளவு பிரம்மாண்ட முறையில் தேர்தல் அமைதியாக நடந்து முடிவதால்தான், உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close