[X] Close

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 6 பேர் பலி: மெக்ஸிகோ காட்டுத் தீயை அணைப்பவர்களுக்கு குடிநீர் எடுத்துச்சென்றபோது பரிதாபம்


6

  • kamadenu
  • Posted: 26 May, 2019 15:23 pm
  • அ+ அ-

-ஏபி

மெக்ஸிகோவில் காட்டுத் தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு தண்ணீர் அளித்து உதவுவதற்காக சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து தேசிய வனவியல் ஆணையம் சனிக்கிழமையன்று தெரிவித்த விவரம்:

''மெக்ஸிகோவின் வடக்கு மத்திய மாகாணமான கொரேடேரோவில் உள்ள சீயர்ரா கோர்டா மலைப்பிரதேசத்தில் சென்ற வாரம் திடீரென தீப்பிடித்தது.

வனப் பிரதேசத்தையே தீக்கிரையாக்கிய காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர் அளித்து உதவும் வகையில் ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ-17 என்ற ஹெலிகாப்டரில் தண்ணீர்  எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் நேற்று (வெள்ளிக்கிழமை) எதிர்பாராதவிதமாக பைன்மரக் காட்டில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஜாப்லான் டி லா சீயர்ரா நகரின் அருகில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடம் மெக்ஸிக்கோவின் வளைகுடா கரையோரப் பகுதியில் உயர்ந்த மலைப் பகுதி ஆகும்.

இதில் ஹெலிகாப்டர் பணியாளர் ஒருவரும் இவருடன் சென்ற 5 கடற்படை வீரர்களும் சேர்த்து மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்''.

இவ்வாறு மெக்ஸிகோ தேசிய வனவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மெக்ஸிகோவில் சமீப வாரங்களாக கடும் வெப்பம் நிலவுவதால் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் காட்டுத் தீ  பரவி நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து சாம்பலாகின. இதில் ஏராளமான மேய்ச்சல் நிலங்களும் கருகின.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close