[X] Close

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 41 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: இலங்கையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து தீவிரம்


41

  • kamadenu
  • Posted: 26 May, 2019 07:39 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 41 பேரின் வங்கிக் கணக்குகளை இலங்கை அரசு முடக்கி உள்ளது.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்த பயங்கர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

எனினும், உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இதையடுத்து அந்த அமைப்புக்கு இலங்கை அரசு தடை விதித்தது. இந்நிலையில், இந்தத் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 41 பேரின் வங்கிக் கணக்குகளை இலங்கை அரசு முடக்கி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகரா நேற்று கூறியதாவது:தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு வைத்திருந்த சிலர் தீவிரவாத தடுப்பு விசாரணைத் துறை (டிஐடி) மற்றும் குற்றத்தடுப்பு விசாரணைத் துறையின் (சிஐடி) காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்த போது ரூ.1.40 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 41 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ.13.40 கோடி உள்ளது. அந்தப் பணம் முடக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய சொத்துகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு ருவான் குணசேகரா கூறினார்.

இதற்கிடையில், இலங்கையில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையை, அதிபர் மைத்ரிபால சிறிசேனா மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து கடந்த புதன்கிழமை உத்தரவிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close