[X] Close

பிரெக்ஸிட் விவகாரம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா


  • kamadenu
  • Posted: 24 May, 2019 18:02 pm
  • அ+ அ-

பிரெக்ஸிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாததால் பதவியை ராஜினாமா செய்வதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது 2016-ல் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பிரெக்ஸிட் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மார்ச் மாதத்துக்குள் கொண்டுவரத் தீர்மானம் செய்யப்பட்டது.

அதன்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளைக் கொண்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. பிரதமர் தெரசா மே இதற்கான முயற்சிகளைத்  தீவிரமாக மேற்கொண்டு  வந்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்று முறையும் பிரெக்ஸிட் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. தெரசா மேவின் சொந்தக் கட்சி  உறுப்பினர்களே தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

மே 22-ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற இருந்த நிலையில், தீரமானங்கள் தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.இதனைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார் தெரசா மே.

பதவி விலகுவது குறித்து தெரசா மே பேசும்போது, ''இங்கிலாந்து பிரதமராகப் பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம். பிரெக்ஸிட் தீர்மானத்தை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட என்னால் முடிந்த அளவு முயற்சித்தேன். ஆனால், என்னால் அதனை  நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. கட்சி புதிய பிரதமரை அறிவிக்கும் வரை பிரதமராகத் தொடருவேன்'' என்று கண்ணீருடன் தெரிவித்தார் தெரசா மே.

இதனைத் தொடர்ந்து ஜூன் 7-ம்  தேதி தனது பதவியை ராஜினாமா செய்கிறார் தெரசா. மேலும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகுகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close