[X] Close

பாகிஸ்தானின் புதிய தூதராக மொயின்-உல்-ஹக் நியமனம்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 07:35 am
  • அ+ அ-

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொயின்-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அமைய உள்ள புதிய அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தையும் தடைபட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வந்த சோஹைல் முகமது, அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலாளராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து இந்தப் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான புதிய தூதர் நியமனம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி பிரதமருடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இதன்படி, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய தூதர்கள் நியமனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதன்படி, இந்தியாவுக்கான தூதராக மொயின்-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது பிரான்ஸ் நாட்டு தூதராக பணியாற்றி வருகிறார். 1987-ல் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்த ஹக் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். துருக்கி, கனடா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close