[X] Close

பாரசீக வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 07:21 am
  • அ+ அ-

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப் பெரிய மையம் இருக்கிறது. இங்கு கடந்த 13-ம் தேதி 4 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அறிவித்தன. இதையடுத்து பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு நேரடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் யார் செய்திருக்கலாம் என்ற யூகத்தில் பல நாடுகள், தீவிரவாத அமைப்புகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான மத்திய கிழக்கு நாடுகளும் இந்த நாசவேலைக்கு காரணம் ஈரானாகத்தான் இருக்கும் என்கின்றன. ஈரானோ, இது இஸ்ரேலின் வேலையாக இருக்கும் என்கிறது. மற்றவர்களோ, ஏமன் நாட்டில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளை எதிர்த்துப் போராடி வரும் ஹவுத்தி போராளிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். இதுவரைக்கும் யார் தாக்குதல் நடத்தினார்கள், எதற்காக நடத்தினார்கள் என்பது தெரியவில்லை.

இத்தனை குழப்பத்துக்கும் நடுவில், எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்டது ட்ரோன் தாக்குதல் என்ற கருத்தும் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்ட்டன் தலைமையிலான நிர்வாகம், ஈரான் தான் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, பாரசீக வளைகுடா பகுதிக்கு கூடுதலாக ராணுவப் படைகளை அனுப்பி வைத்துள்ளது. அங்கு ஏற்கனவே ஃபிப்த் ப்ளீட் போர்க் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு தற்போது பி-52 ரக குண்டு வீசும் விமானங்களையும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் பேட்ரியாட் ஏவுகணை அழிப்பு சிஸ்டத்தையும் அப்பகுதியில் ஈடுபடுத்தியுள்ளது. வெளிநாடுகளில் போரிடும் அமெரிக்க வீரர்கள் அனைவரையும் திரும்ப அழைத்துக் கொள்ளப் போவதாக ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், ஈரானை வழிக்குக் கொண்டு வர 1.20 லட்சம் போர் வீரர்களை அனுப்பவும் ட்ரம்ப் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஈரானுடன் போர் புரிய அமெரிக்கா தயாராகி வருகின்றது என்றால், அது என்ன காரணத்துக்காக இருக்கும் என்பதே இப்போதைய கேள்வி.

உறுதி செய்யப்படாத தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா போர் சூழலை உருவாக்குவது இது ஒன்றும் முதன் முறையல்ல. ஏற்கனவே இதுபோன்ற முடிவுகளால் ஏற்பட்ட போர்களால், பல ஆயிரம் வீரர்களின் உயிரிழப்பையும் பல லட்சம் கோடி டாலர்கள் பொருள் இழப்பையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதற்கான விலையை இன்னும் கொடுத்து வருகிறது. கடந்த 1964-ம் ஆண்டில் டோங்கின் வளைகுடா பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தைக் காரணமாக வைத்து, வியட்நாம் போரை தீவிரப்படுத்தினார் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன். அமெரிக்காவின் போர்க் கப்பல்களான மேட்டாக்ஸ் மற்றும் டர்னர் ஜாய் மீது வியட்நாம் ரோந்து படகுகளில் இருந்து டார்பிடோ ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது. ஆனால் அதன்பிறகு நடந்த தீவிர விசாரணையில், அதுபோன்ற தாக்குதல் நடக்கவே இல்லை என அமெரிக்க கடற்படையும் புலானாய்வு அமைப்புகளும் தெரிவித்தன.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையின்படி, எந்தவொரு தாக்குதலும் நடக்கவே இல்லை. ஆனால் தாக்குதல் நடந்ததுபோல் காட்ட தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டது என இந்த அமைப்பின் பெயர் சொல்ல விரும்பாத விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் டோங்கின் வளைகுடா தீர்மானத்தின்படி, வியட்நாம் மீது போரை நடத்தியே தீரவேண்டும் என அதிபராக இருந்த ஜான்சன் வலியுறுத்தினார். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற வேண்டும் என்றும் விரும்பினார். ஆனால் 2 செனட் உறுப்பினர்கள் எதிர்ப்போடுதான் தீர்மானம் நிறைவேறியது. இதில் முரண்பாடு என்னவென்றால், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஜான்சனுக்கும் சந்தேகம்தான். தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி, கடலில் பறக்கும் மீனைப் பார்த்து அந்த முட்டாள் மாலுமிகள் சுட்டிருப்பார்கள் என அவரே உள்துறை அதிகாரிகளுடன் பேசும்போது கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் அடுத்த தவறான கணிப்பால் 2003-ல் இராக் போர் ஏற்பட்டு, அதிபராக இருந்த சதாம் உசேன் பதவியில் இருந்து தூக்கிஎறியப்பட்டார். அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் அமைச்சரவையில் இருந்தவர்கள், அல் காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் இராக், மக்களை கூட்டம் கூட்டமாகக் கொல்லக்கூடிய ரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறது என்றும் அதை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் கற்பனையான புகாரை கூறினார்கள். இந்த இரண்டு புகார்களுமே பொய்யானவை. ஆனால், இராக்குடன் போர் புரிய போதுமான காரணங்கள். இந்த போரால், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதிக்கப்பட்டன. இராக் அரசை நீக்கியதன் விளைவாக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உருவாகி அதன் கொடுமை இன்னமும் தொடர்கிறது.

பாரசீக வளைகுடாவில் அதிகரித்து வரும் போர் அபாயம் காரணமாக அப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்குமே பாதிப்புதான். எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளையும் ஆசிய, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளையும் இணைக்கும் குறுகலான கடல்வழி ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை மூடப் போவதாக ஈரான் மிரட்டியுள்ளது. ஏறக்குறைய 30 சதவீத கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் இதர எண்ணெய் பொருட்கள் இந்த வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. மாற்று வழி இருந்தாலும் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், விலை இன்னமும் அதிகரிக்கும் என்பதால் உலக நாடுகள் கவலையோடு இருக்கின்றன. ஏற்கனவே முடிவு எடுத்தபிறகு, அதன் அடிப்படையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடாமல், இந்த விஷயத்தில் ஆற அமர, பொறுமையாக முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது.

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close