[X] Close

எவரெஸ்டில் 23-வது முறையாக ஏறி நேபாள வீரர் புதிய உலக சாதனை


23

  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:25 am
  • அ+ அ-

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 23-வது முறையாக ஏறி நேபாள வீரர் கமி ரிதா ஷெர்பா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நேபாளத்தின் கும்பு பள்ளத்தாக்கு பகுதியில் ஷெர்பா என்றழைக்கப்படும் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் மலையேறுவதில் வல்லவர்கள். கடந்த 1953 மே 29-ம் தேதி நியூஸிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரியும் நேபாளத்தின் ஷெர்பா இனத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கேவும் முதல்முறையாக 8,850 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர். அன்றுமுதல் இன்றுவரை மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டியாக ஷெர்பா இன மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேபாளத்தின் கும்பு பள்ளத்தாக்கு, சோளுகும்பு மாவட்டம், தாமே கிராமத்தைச் சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா. ‘செவன் சமிட் டிரக்ஸ்'என்ற நிறுவனத்தில் மலையேற்ற வழிகாட்டியாக பணியாற்றும் இவர் கடந்த 1994-ம் ஆண்டில் தன்னுடைய 24-வது வயதில் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரம் மீது ஏறினார். அபா ஷெர்பா, புர்பா தாஸி ஷெர்பா ஆகியோர் எவரெஸ்டில் 21 முறை ஏறியதே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 2017-ம் ஆண்டில் கமி ரிதா ஷெர்பாவும் எட்டினார். கடந்த 2018-ம் ஆண்டில் 22-வது முறையாக எவரெஸ்டில் ஏறி புதிய உலக சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 23-வது முறையாக எவரெஸ்டில் கால் பதித்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

கமி ரிதா ஷெர்பா கூறியபோது, "நான் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். என்னுடைய 12 வயது முதல் மலையேற்ற வீரர்களுக்கு சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றினேன். கடந்த 1994-ம் ஆண்டில் 24-வது வயதில் முதல்முறையாக எவரெஸ்ட் மீது ஏறினேன். தற்போது என்னுடைய 49 வயதில் 23-வது முறையாக எவரெஸ்டில் கால் பதித்துள்ளேன்.. இன்னும் 2 முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைக்க திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close