[X] Close

இலங்கையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு வாபஸ்: கலவரத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது


60

  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:24 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு நேற்று விலக்கிக் கொண்டுள்ளது. மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக 60 பேரை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 21-ம் தேதியன்று (ஈஸ்டர் பண்டிகை) தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த பயங்கர தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இலங்கை மட்டுமின்றி உலகையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதுதொடர்பாக ராணுவத்தினரும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முஸ்லிம்கள் மீது தாக்குதல்

இந்நிலையில், இத்தாக்குதலுக்கு பதிலடியாக முஸ்லிம்கள் மீது சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தினர். இது, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாக மாறியது. இதில் பலர் படுகாயமடைந்தனர். முஸ்லிம் மக்களின் வீடுகள், அவர்கள் நடத்தி வந்த கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை முழுவதும் கடந்த திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டன. அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ராணுவத்தினரும், போலீஸாரும் மாகாணங்கள்தோறும் குவிக்கப்பட்டனர்.

ஊரடங்கு விலக்கு

இதன் தொடர்ச்சியாக, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம், முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 60 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அமைதி திரும்பியதை அடுத்து, இலங்கையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு நேற்று விலக்கிக் கொண்டது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close