[X] Close

பிரான்ஸும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:15 am
  • அ+ அ-

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

பல ஆண்டுகளாக விவாதப் பொருளாக இருந்து வரும்ஐ.நா. அமைப்பின் முக்கியஅங்கமான பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்த பிரச்சினையை பிரான்ஸ் மீண்டும் கிளப்பியிருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேஸில் நாடுகளும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என ஐ.நா.வின் பிரான்ஸ் நாட்டு பிரதிநிதி பேசியிருக்கிறார். ஐ.நா. அமைப்பிலும் பாதுகாப்பு கவுன்சிலிலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது தொடர்பான விவாதம் கடந்த காலங்களிலும் அவ்வப்போது நடந்திருக்கிறது. ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் அலட்சியம், சுயநலம் காரணமாக இந்தக் கோரிக்கை கண்டு கொள்ளப்படவே இல்லை.

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக பில் கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியிருக்கிறார். தற்போதுள்ள 5 உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஜெர்மனி, ஜப்பானையும் சேர்த்து 7 ஆக உயர்த்த முயற்சி எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டிலேயே இதுபோன்ற ஒரு சீர்திருத்தத்துக்கு அணிசாரா இயக்க நாடுகளின் கூட்டத்தில் அழைப்பு விடப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தும் எந்த முயற்சியும் அமெரிக்காவின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் என்பதால் அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசுகள் இந்த விஷயத்தில் கவனம்செலுத்தவில்லை. அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் வி. புஷ், ஜப்பானை மட்டும் உறுப்பினராக்கலாம் என நினைத்தார். பராக் ஒபாமா இந்தியாவையும் உறுப்பினராக்கும் யோசனையை முன்வைத்தார்.

கடந்த 1945-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திட்டங்கள், 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றதாக இருக்காது என்பதால். ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அதுபற்றி விவாதம் நடத்தி, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வைக் கொண்டு வரும் அரசியல் துணிவு எந்த பெரிய நாட்டுக்கும் இல்லை என்பது வருத்தமான விஷயம்தான். இதுபோன்ற சூழ்நிலையில் மேலும் நான்கு நாடுகளை உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற பிரான்ஸ் நாட்டின் அறிக்கை வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால், ஆப்பிரிக்க நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் தங்களையும் உறுப்பினர்களாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. தென்னாப்பிரிக்கா, உகாண்டா, கென்யா, தான்ஸானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும், சவுதி அரேபியா, ஈரான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் தங்களையும் பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்க வேண்டும் என விரும்புகின்றன. ஆசியாவிலும் கூட, ஜப்பான், இந்தியாவோடு, இந்தோனேசியாவையும் உறுப்பினர்கள் ஆக்கலாம்.

பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இந்தியாவுக்கு அத்தனை தகுதியும் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே ஐ.நா. அமைப்புடன் இணைந்து இந்தியா ஆற்றி வரும் பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுவது, கடற்கொள்ளைகளைத் தடுப்பது போன்ற பணிகளோடு, உள்நாட்டுக் கலவரம் நடக்கும் நாடுகளில் அமைதி காக்கும் பணிகளுக்கு வீரர்களையும் உதவிப் பொருட்களையும் அதிக அளவில் இந்தியா அளித்து வருகிறது. இந்தியாவை எந்த நாடும் ஒரு பிராந்திய அதிகார மையமாக பார்ப்பதில்லை. முதிர்ச்சியடைந்த உலகப் பொருளாதார சக்தியாகவும் சர்வதேச அரங்கில்அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பராமரிக்கும் பணியில் முக்கியப் பங்காற்றும் நாடாகவும்தான் உலக நாடுகள் பார்க்கின்றன. இந்தியாவும் ஜப்பானும் உறுப்பினர்கள் ஆவதற்கு சீனாகுறுக்கே நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது எதிர்ப்புக் குரலாவது கொடுக்கும். சர்வதேச அரங்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் சமமல்ல என அனைத்து நாடுகளுக்கும் தெரியும் என்றாலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக, பாகிஸ்தானையும் பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்க வேண்டும் என சீனா கோரிக்கை வைக்கும்.

பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தும் பணியில் பிரான்ஸ் சந்திக்கப் போகும் சவால்கள் அதிகம். ஆனாலும் இந்த முயற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட காலம் மிகவும் சரியானது. பல ஆண்டுகளாகவே பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்படும், தற்காலிக உறுப்பினர்களாக புதிய நாடுகள் சேர்க்கப்படும் என வெற்று அறிக்கையைத்தான் பார்த்து வந்திருக்கிறோம். இந்த விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும். ஐ.நா.வில் இந்தியாவுக்கான பிரதிநிதியாக இருக்கும் சையது அக்பருதீன் கூறியதைப் போல், `இந்த முயற்சியைத் தொடங்கியபோது இருந்த நிலைமை இப்போது இல்லை. ஆனால் எதிர்ப்புகள் மட்டும் அப்படியே இருக்கிறது. 21-ம் நூற்றாண்டின் சர்வதேச சவால்கள் பல மடங்கு பெருகி விட்ட பிறகும், மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைத் தொடங்காமல் நாம் இன்னமும் பிளவுபட்டு நிற்கிறோம்' என்பதுதான் தற்போதைய நிலைமை.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close