[X] Close

உலகின் அதிவேக புல்லட் ரயில் ஜப்பானில் சோதனை ஓட்டம்: மணிக்கு 400 கி.மீ. வேகத்தை எட்டியது


400

  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:17 am
  • அ+ அ-

உலகின் அதிவேகமான புல்லட் ரயில் நேற்றுமுன்தினம் ஜப்பானில் சோதனை அடிப்படையில் இயக்கி பார்க்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

அதிவேக புல்லட் ரயில்களை ஷின்கான்சென் என்ற பெயரில் ஜப்பான் அரசு இயக்கி வருகிறது. ஜப்பானில் உலகின் அதிவேகமான புல்லட் ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த ரயிலுக்கு ஆல்பா-எக்ஸ் புல்லட் ரயில் என்று பெயர் வைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இந்த ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தை எட்டி சாதனை புரிந்தது. இந்த ரயில் 2030-ம் ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். அப்போது இந்த ரயில் மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.

தற்போது சீனாவில் புக்ஸிங் என்ற பெயரில் புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மணிக்கு 390 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில்கள் தற்போது உலகின் அதிவேக புல்லட் ரயில்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளன.

ஜப்பானின் ஆல்பா எக்ஸ் புல்லட் ரயில், சீன புல்லட் ரயிலின் வேகத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த ஆல்பா எக்ஸ் புல்லட் ரயிலில் மிக நீளமான மூக்கு கொண்ட என்ஜினும், 10 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து, சென்டா மற்றும் ஆமோரி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு சோதனை செய்யப்படும். சென்டா மற்றும் ஆமோரி இடையேயான தூரம் 280 கிலோமீட்டர் ஆகும்.

வாரத்தில் 2 முறை இரவு நேரங்களில் மட்டும் இந்த சோதனை ஓட்டம் நடைபெறும்.

ஆல்பா-எக்ஸ் புல்லட் வகை ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று ஆல்பா-எக்ஸ் புல்லட் ரயில் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஜப்பானில் ஷின்கான்சென் வகை புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2020-ம் ஆண்டில் ஷின்கான்சென் என்700எஸ் வகை புதிய புல்லட் ரயில்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த ஷின்கான்சென் என்700எஸ் ரயில்கள் ஏற்கெனவே சோதனை செய்யப்பட்டு பயன்பாட்டுக்குத் தயாராகவுள்ளன. 2020-ம் ஆண்டில் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த போட்டியையொட்டி இந்த ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close