[X] Close

உங்களுக்கு சவிதாவை நினைவு இருக்கிறதா?


remember-savita

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 May, 2018 11:02 am
  • அ+ அ-

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாகவே அதிகமாக வாக்குகள் பதிவாகும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், அயர்லாந்துக்கும் சவிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? தொடர்பு இருக்கிறது.

அயர்லாந்தில் வசித்த இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா. இவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு, கருச்சிதைவு ஏற்பட்டதால், கருக்கலைப்புக்கு அனுமதி கோரினார். அந்நாட்டில் கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், சவிதா உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பின் அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டவிரோதமல்ல என திருத்தம் கொண்டுவரக் கோரி பெருந்திரளானோர் போராட்டக் குரல் எழுப்பினர்.

இந்நிலையில்தான், அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கருக்கலைப்புக்கு ஆதரவான வாக்கெடுப்பின் பிரச்சாரத்தில், அந்நாட்டில் கருக்கலைப்புக்கான அனுமதி கிடைக்காமல் உயிரிழந்த இந்திய பெண்ணின் புகைப்படங்கள் இடம்பெற்றன.

இப்போது தெரிகிறதா சவிதாவுக்கும் அயர்லாந்துக்கும் என்ன சம்பந்தம் என்று. பொதுவாக்கெடுப்பு கருக்கலைப்பு ஆதரவாக அமைந்தால் அயர்லாந்து பெண்கள் என்றென்றும் சவிதாவை நினைவு கூர்வர்.

அயர்லாந்தில் வாக்கெடுப்பு நடந்து கொண்டிருந்த வேளையில் சவிதாவின் தந்தை ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், "என் மகள் வேதனையில் துடிதுடித்து இறந்துபோனாள். அவள் மட்டும் அயர்லாந்தில் இல்லாமல் வேறு ஒரு நாட்டில் இருந்திருந்தால் இறந்திருக்கமாட்டாள். கருக்கலைப்பு சட்டத்தில் அயர்லாந்து அரசு சீர்திருத்தம் செய்ய வேண்டும். வாக்களிக்கும் மக்கள் சவிதாவை நினைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும்" என்று உருக்கமாகக் கூறினார்.

இந்திய கருக்கலைப்பு சட்டம் பற்றியும் தெரிந்துகொள்வோம்..
1971ஆம் ஆண்டு மருத்துவ முறையில் கருக்கலைப்புச் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து, இந்தியாவில் கருக்கலைப்பு செய்வது என்பது சட்டப்படியான செயலாக்கப்பட்டது. கருக்கலைப்பை பாதுகாப்பான செயலாக மாற்றவும், கருக்கலைப்பு செய்ய விரும்புபவர் மீது குற்றம் சுமத்தப்படாமல் தடுக்கவும், சட்டவிரோதமான கருக்கலைப்பு முறைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

ஒரு பெண் எப்போது கருக்கலைப்பு செய்யலாம்?
இந்தியாவில், கருவின் வயது இருபது வாரம் வரை இருக்கும் போது மட்டுமே சட்டப்படி கருக்கலைப்பு செய்யலாம். அதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன.

கருவின் வயது 12 வாரங்களுக்குக் குறைவாக இருந்தால், ஒரு மருத்துவரே கருக்கலைப்பைப் பற்றி முடிவெடுக்கலாம், கருவின் வயது 12 வாரங்களுக்கும் அதிகமாக, அதே சமயம் 20 வாரங்களுக்குக் குறைவாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழுவாகவே பின்வரும் முறையில் முடிவு செய்யலாம்:
கர்ப்பம் தொடர்ந்தால், அது அந்தப் பெண்ணுக்கு உடல் அல்லது மன ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்குமா, அல்லது அது அவரது உயிருக்கு ஆபத்தாகுமா என்பது பற்றி யோசிப்பார்கள்
(அல்லது)
கர்ப்பம் தொடர்ந்தால், அவரது உடல் அல்லது மன பிரச்சனைகளால் அந்தக் குழந்தைக்கு ஏதேனும் பெரிய பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி யோசிப்பார்கள்.

தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக கருக்கலைப்பு செய்தாக வேண்டும் என்பது போன்ற அவசர சூழ்நிலைகளில், கருவின் வயது 20 வாரத்திற்குள் இருக்கும்பட்சத்தில் ஒரே மருத்துவர் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாம்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close