[X] Close
 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இலங்கை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்: யாழ்ப்பாணத்தில் அஞ்சலி


sterlite-deaths

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி

  • kamadenu
  • Posted: 25 May, 2018 12:19 pm
  • அ+ அ-

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலியும், கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்றனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியாகிவிட்டனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

இதைக் கண்டித்து, இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு முன் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கோஷமிட்டனர். முன்னதாக துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில், தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவும், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்

 இந்த துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக புதன்கிழமை பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன் ஏராளமான தமிழர்கள் திரண்டனர். குழந்தைகள், பெண்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘ஸ்டெர்லைட் உரிமையாளரை கைது செய்ய வேண்டும்’, ’ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்’, ‘தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும்’ என்று கோஷமிட்டனர்.

- எஸ். முஹம்மது ராஃபி

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close