[X] Close

மனதை மயக்கும் மாயா விரிகுடா சுற்றுலாவாசிகளுக்கு அனுமதியில்லையா?


thai-bay-made-famous-by-film-the-beach-to-close-for-four-months

மாயா கடற்கரை | கோப்புப் படம்

  • பால்நிலவன்
  • Posted: 24 May, 2018 17:43 pm
  • அ+ அ-

தாய்லாந்து நாட்டின் மாயா கடற்கரை. மனதை மயக்கும் ஒரு கடல்பிரதேசம்...

டி காப்பிரியோ நடித்து, 2000ல் வெளிவந்த தி பீச் திரைப்படம் எடுக்கப்பட்ட அழகிய கடற்பகுதி 4 மாதங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும்போது எதற்கு இந்த அறிவிப்பு என்று வருத்தத்தில் இருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு வருகை தருவதாலும், தற்போதைய கோடையினால் வெப்பநிலை அதிகரிப்பதாலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பவளத்திட்டுக்களைப் பாதுகாக்கத்தான் இப்படி நான்கு மாதத்திற்கு மூடி வைக்க முடிவுசெய்திருக்கிறார்களாம்.

அப்படியென்ன இந்தக் கடற்கரைக்கு மட்டும் தனியான அழகு என்றுதானே கேட்கக் தோன்றுகிறது? இவ்விரிகுடா அந்தமான் கடலில் உள்ள பை பை லெக் தீவில் உள்ளது. இக்கடல் பிரதேசமே 'தி பீச்' படத்தின் முக்கிய களமாக இடம்பெற்றுள்ளது. இயற்கை எழில்மிக்க தாய்லாந்தின் நீலப்பச்சை கடல்களும் வெண்பொடி கடற்கரைகளும் சுற்றுலாவசிகளின் மனதைக் கவர்ந்திழுக்க, பலமுறை அவர்களை வரவழைக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எவ்வளவு அழகான கடற்கரை என்று.

தாய்லாந்து சுற்றுலா நிறுவனம், மாயா விரிகுடாவுக்கு வேகப் படகு மற்றும் சாதாரண படகுகளை செலுத்தி வருகிறது. 100 மீட்டர் உயரமான பாறைகளை நோக்கி மாயா கடலில் மிதந்துசெல்வது அலாதியான அனுபவத்தைத் தரக்கூடியது. அதனாலேயே ஒவ்வொருநாளும் 5,000 பார்வையாளர்கள் இக்கடற்கரைக்கு வருகை தருகிறார்கள் என்கிறது ஒரு தாய்லாந்து சுற்றுலா நிறுவனம்.

அதிகரிக்கும் வெப்பநிலை, அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றால் பவளத்திட்டுக்கள் சேதமடைய வாய்ப்புண்டு என்பதால் இப்பகுதி ஜூன் 1லிருந்து மூடப்பட்டிருக்கும். இது குறித்து புக்கெட்டில் உள்ள தாய்லாந்து சுற்றுலாத்துறை அலுவலகத்தின் இயக்குநர் கானோகிட்டிக்கா கிரித்வுடிகான் கூறுகையில், ''இயற்கைக் வளங்களைப் பாதுகாக்க இதுவும் ஒரு வழியாகும். இது எங்கள் சுற்றுலாத் தொழிலின் முக்கிய அங்கமாகும்'' என்றார்.

குறிப்பிட்ட கடல் பகுதி தன் எழிலைத் திரும்பப் பெறுவதற்காக ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாயா விரிகுடாவில் உள்ள திட்டுக்களுக்கு படகுகள் அனுமதியில்லை. ஆனால் அந்த வழியாக படகுகள் செல்லும்'' என்று இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் 12 சதவீதத்தை சுற்றுலாத்துறையே ஈட்டி வருகிறது. ஆனால் வளர்ந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும், அதிக சுற்றுலாவாசிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் சமாளிக்கும் திறன் தாய்லாந்திடம் இருக்கிறதா என்ற கவலையும் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாக தாய்லாந்தின் 24 கடற்கரைப் பகுதிகளில் புகைப்பிடிக்கவும் குப்பைகள் போடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடல் கழிவுகளை அதிகரிப்பதில் உலகின் மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் தாய்லாந்தும் ஒன்றாக இருக்கிறது. இது வன உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகி இருப்பதாக ஆறிவியல் ஆய்வறிக்கை தெரிவித்தது.

பை பை தீவில் விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றும் ஜெங் (35), ''இதேபோன்ற சமமான கண்ணுக்கினிய இடங்கள் பலவும் மற்றப் பகுதிகளிலும் உள்ளன என்கிறார். அதுமட்டுமின்றி, ஜூன் முதல் செப்டம்ர் வரை முக்கியமான சீஸன் இல்லை.

மங்கிப் பீச் மற்றும் பாம்பூ தீவு போன்ற மற்ற கடற்கரைப் பகுதிகளுக்கும் என்னால் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்'' என்று தாய்லாந்து கடற்கரைக்குச் சென்று இளைப்பாறியே ஆக வேண்டும் என்று துடிப்பவர்களின் ஆசையில் கொஞ்சம் பால் வார்த்திருக்கிறார் ஜெங்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close