[X] Close

இலங்கையில் கிறிஸ்தவர் - முஸ்லிம் மோதல்: அமைதி காக்க ரோமன் கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 06:39 am
  • அ+ அ-

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தற்கொலைப் படை தீவிரவாதிகள் கொடூர தாக்குல் நடத்தினர். இலங்கையை உலுக்கிய இந்த தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு இலக்கான 3 தேவாலயங்களில், தலைநகர் கொழும்புவுக்கு வடக்கே 40 கி.மீ. தொலைவில் நீர்க்கொழும்பு நகரில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயமும் ஒன்றாகும். இங்கு அதிக அளவாக 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில் நீர்க்கொழும்பு நகரில் நேற்று முன்தினம் இரவு கிறிஸ்தவர் – முஸ்லிம்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டன.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணைய தள சேவை முடக்கப்பட்டது. பின்னர் நேற்று காலையில் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது. மதியம் இணைய தள சேவை முடக்கம் நீக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் விடுத்துள்ள செய்தியில், “இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள், நமது மதக் கலாச்சாரத்தில் அவர்களும் ஒரு பகுதி ஆவர். எனவே அவர்களில் ஒருவரைக் கூட துன்புறுத்தக் கூடாது என கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளை வேண்டிக்கொள்கிறேன். இலங்கையில் அனைத்து சமூகத்தினரிடமும் உறவுகளை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கார்டினல் மால்கம் ரஞ்சித் நேற்று நீர்க்கொழும்பு நகருக்குச் சென்று அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் முஸ்லிம் குருமார்களுடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து நீர்க்கொழும்பு நகரில் மதுபான விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே இலங்கை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நீர்க்கொழும்பு நகரில் மதுபோதையில் இருந்த இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். மோதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமரா மூலம் பலரை அடையாளம் கண்டுள்ளோம். அவசரநிலை சட்டங்களின்படி இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். நீர்க்கொழும்பு வன்முறையில் சேதமடைந்த சொத்துகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதன் பிறகு முதல்முறையாக நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. என்றாலும் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close