[X] Close

ஜப்பானின் புதிய சகாப்தம்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 07:00 am
  • அ+ அ-

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

உலகிலேயே மிகவும் பழமையான அரச பரம்பரையைக் கொண்ட நாடு ஜப்பான். அங்கு கி.மு. 600-ம் ஆண்டு முதல் பரம்பரை பரம்பரையாக மன்னர்கள் இருந்து வருகிறார்கள். உடல் நலக் குறைவு காரணமாக 85 வயதாகும் அகிஹிட்டோ மன்னர் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து, ஜப்பானின் 126-வது மன்னராக அவரது மகன் 59 வயது நருஹிட்டோ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் மன்னர் ஒருவர் தானாக பதவி விலகுவது ஜப்பானில் இதுதான் முதன்முறை. ஹேய்சேய் (எங்கும் அமைதி) சகாப்தத்தின் செங்கோலை தனது மகனிடம் அளித்து ரேய்வா (அழகான நல்லிணக்கம்) சகாப்தத்தை தொடரும்படி கூறியுள்ளார். ஆண்கள் மட்டுமே அரச பதவிக்கு வரும் ஜப்பானின் சரித்திரத்தில், இனி அரசர் அகிஹிட்டோ மாமன்னர் பட்டத்தோடு தனது தனிப்பட்ட வாழ்க்கையை அமைதியாகக் கழிக்கப் போகிறார்.

ஹேய்சேய் சகாப்தத்தில் இருந்து ரேய்வா சகாப்தத்துக்கான மாற்றம் பலருக்கும் பலவிதமாய் இருக்கும். மன்னராட்சிக்கு அரசியல்ரீதியாக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் ஜப்பானின் அரசியல் இப்போது முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. ஜப்பானில் அரசியல் கொள்கைகள் வேறுபட்டு இருந்தாலும் கலாச்சாரம் மிகவும் மதிக்கப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் ஜப்பான் அரச வம்சம் உலக வரலாற்றில் தலைநிமிர்ந்தே இருந்துள்ளது. மன்னர் நருஹிட்டோவின் தாத்தா மன்னர் ஹிரோஹிட்டோவின் காலமான 1926 முதல் 1989 வரையில் இரண்டு உலகப் போர்கள், பொருளாதார முடக்கம் என பல பிரச்சினைகளை ஜப்பான் சந்தித்தது. இதுபோக, இனவாதம் தலைதூக்கியது. இதன் காரணமாக சீனாவின் படையெடுப்பையும் சந்திக்க வேண்டியிருந்தது.

மன்னர் ஹிரோஹிட்டோவின் ஸோவா சகாப்தத்தின் போதுதான் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வி அடைந்தது.

முதன்முறையாக அன்னிய நாட்டின் ஆட்சியின் கீழ் ஜப்பான் வந்தது. 1952-ல் சான் பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது. ஆனாலும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவை போல், ஜப்பான் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய எழுச்சியை அடைந்தது. இப்போதும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 1989-ம் ஆண்டு மன்னர் ஹிரோஹிட்டோ மரணத்துக்குப் பிறகு ஸோவா சகாப்தம் முடிந்து ஹேய்சேய் சகாப்தம் தொடங்கியது. மன்னர் அகிஹிட்டோ காலத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சி, உலகமயமாக்கல் பிரபலமானது. மன்னரும் அரசியும் சாதாரண மக்களோடும் உரையாடத் தொடங்கினார்கள். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அதோடு ஜப்பானின் நல்லெண்ணத் தூதராகவும் செயல்பட்டனர். 1960-ல் இந்தியா வந்த முதல் அரச பரம்பரையினர் மன்னர் அகிஹிட்டோவும் அரசி மிச்சிகோவும்தான். மீண்டும் 2013-ல் 6 நாள் அரசுப் பயணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளையும் சுற்றி வந்தனர் இருவரும். இதனால் இந்தியா - ஜப்பான் இடையேயான உறவு மேலும் வலுவடைந்தது.

சர்வதேச அளவில் ஜப்பானின் பங்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படும் இந்த நேரத்தில் மன்னர் நருஹிட்டோ பதவியேற்றிருக்கிறார். உள்நாட்டில் தற்காப்புக்காக படைகளை உருவாக்குவது உள்ளிட்ட முக்கியமான அரசியல் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தீவிரமாக விவாதம் நடந்து வருகிறது. அரசியலில் மன்னரின் பங்கு குறைவு என்றாலும் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் அவர். மன்னராகப் பதவியேற்றபோது, தனது தந்தையான மன்னர் அகிஹிட்டோ வகுத்த பாதையில் செயல்படப் போவதாகத் தெரிவித்தார். ‘‘மிகவும் முக்கியமான பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். அதற்கேற்ப எனது செயல்பாடு இருக்கும்'’ என்றும் மன்னர் நருஹிட்டோ கூறியிருக்கிறார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற மன்னர் நருஹிட்டோ, தனது தந்தையைப் போலவே அரச பரம்பரையைச் சேராத ஒரு பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். ஹார்வர்டு பல்கலையில் பயின்று தூதரக அதிகாரியாக இருந்த மசாகா ஓவாடாவை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். ஆண்கள் மட்டுமே அரச பதவிக்கு வரும் வழக்கத்துக்கு விடை கொடுக்க வேண்டும் என பரவலாகப் பேசப்பட்டு வரும் சூழலில், மன்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் நருஹிட்டோ. உலகம் முழுவதும் பாலின பாகுபாட்டுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், ஆண்கள்தான் அரச பதவியை ஏற்க வேண்டும் என்ற இந்த வழக்கத்தை மாற்றினால் ஜப்பான் அழிந்துவிடும் என வலதுசாரிகள் கண்டிப்பாக எதிர்ப்புக் குரல் கொடுப்பார்கள்.

ஆனாலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பெண்களும் அரச பதவியில் அமர ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்கள் ஜப்பானியர்கள். மன்னர் நருஹிட்டோவின் ரேய்வா சகாப்தம் இந்த மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close