[X] Close

ரஷ்யாவில் அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு: இருதரப்பு உறவை பலப்படுத்துவது பற்றி ஆலோசனை


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 07:33 am
  • அ+ அ-

ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை நேற்று முதன்முறையாக சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவை பலப்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

வடகொரியா முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் மறைவுக்குப் பிறகு அவரது மகன் கிம் ஜாங் உன் 2011-ல் அதிபராக பொறுப்பேற்றார். இவர் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி, ஆணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தினார். இதையடுத்து, வடகொரியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், கிம்மும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்தனர். இதன்படி, கடந்த ஆண்டு இரு தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவும் பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரு தலைவர்களும் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் சந்தித்துப் பேசினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், தங்கள் நாட்டுக்கு வருமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு புதின் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தார்.

இதையடுத்து, ரஷ்யா சென்றுள்ள கிம், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை விளாடிவோஸ்டாக் நகரில் நேற்று தனியாக சந்தித்துப் பேசினார். இந்த இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியது இதுதான் முதல் முறை. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் இருதரப்பு அதிகாரிகளுடன் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசி உள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து கிம் கூறும்போது, “புதின் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. இருதரப்பு நலன் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்” என்றார்.

புதின் கூறும்போது, “கிம் வெளிப் படையான மனிதர். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் என்னுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. இதன்மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுவடையும். கிம்முடனான சந்திப்பு குறித்து சீன அதிபருடனும் அமெரிக்க அதிபருடனும் ஆலோசனை நடத்துவேன்” என்றார்.

பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் வடகொரிய தொழிலாளர்களின் பணி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிய உள்ளது. இவர்கள் வடகொரியாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளனர். எனவே, இவர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்குமாறு புதினிடம் கிம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

வடகொரியாவில் இந்த ஆண்டு உணவுப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வடகொரியா ஏற்கெனவே ஐ.நா. சபையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா தொடர்ந்து உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கிறது. குறிப்பாக, சமீப காலத்தில் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவுப் பொருட்களை வடகொரியாவுக்கு ரஷ்யா வழங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு முறை 2 ஆயிரம் டன் கோதுமையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவை கட்டுப்படுத்த ரஷ்யா விரும்புகிறது. இதற்கு கிம் உடனான சந்திப்பு ஒரு வாய்ப்பாக இருக்கும் என ரஷ்யா கருதுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 முறையும், தென்கொரிய அதிபர் மூன்-ஜே-இன்னை 3 முறையும், அமெரிக்க அதிபர் ட்ரம்பை 2 முறையும், புதினை ஒரு முறையும் சந்தித்துள்ளார் கிம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close