[X] Close

இந்தியா முன்கூட்டியே எச்சரித்தும் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்?- இலங்கைக்கு சர்வதேச ஊடகங்கள் கேள்வி


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 07:08 am
  • அ+ அ-

முன்கூட்டியே இந்தியா எச்சரித்தும் தீவிரவாத தாக்குதலை இலங்கை தடுக்கத் தவறியது ஏன் என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு பகிரங்கமாக பொறுப்பேற்றுள்ளது. இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத குழு, ஐஎஸ் உடன் இணைந்து தாக்குதலை நடத்தி உள்ளது என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த 4-ம் தேதி இந்தியா ரகசியமாக எச்சரிக்கை விடுத்தது. இதுதொடர்பான முக்கிய ஆவணங்களையும் அளித்தது. ஆனால் இலங்கை அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதும் வெடிபொருட்களை பதுக்கி வருவதும் பாதுகாப்புப் படையினருக்கு முன்னரே தெரியவந்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றையும் உளவுத் துறை, பாதுகாப்பு துறைக்கு வழங்கியுள்ளது. ஒரு தீவிரவாதி நள்ளிரவில் தனது மனைவியை சந்திப்பதையும் உளவுத் துறை முன்கூட்டியே தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எச்சரிக்கை, இலங்கை உளவுத் துறையின் ரகசிய தகவல்களுக்குப் பிறகும் இலங்கை அரசு தீவிரவாத தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன் என்று நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்கு அதிபர், பிரதமர் இடையிலான மோதலே முக்கிய காரணம் என்று அந்த ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே கடந்த ஆண்டு முதல் கருத்து வேறுபாடு நிலவுகிறது. நாட்டின் பாதுகாப்புத் துறை முழுமையாக அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ளது. "பாதுகாப்புத் துறை கூட்டங்களில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. உளவுத் துறையின் ரகசிய அறிக்கை பிரதமருக்கு கிடைக்கவில்லை" என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்றத்தில் நேற்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியபோது, "ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கை அரசின் முக்கிய அதிகாரிகள், குறிப்பாக கிறிஸ்தவ அதிகாரிகள், தேவாலயங்களுக்கு செல்லவில்லை. தீவிரவாத தாக்குதலை அவர்கள் முன்கூட்டியே அறிந்துள்ளனர்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் பெரும்பான்மை பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களும் இடையே இதுவரை மோதல்கள் ஏற்பட்டது கிடையாது. அப்படியிருக்கும்போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்தில் அண்மையில் 2 மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இலங்கையில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று சர்வதேச புலனாய்வு அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன. இந்த கருத்தை இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தனவும் ஆமோதித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close