[X] Close

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: விசாரணைக்கு உதவ முன்வந்த இண்டர்போல்; அமெரிக்கா, கனடா தனது குடிமக்களுக்கு அறிவுரை


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 16:18 pm
  • அ+ அ-

இலங்கை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திய ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு முழு உதவி செய்யத் தயாராக இருப்பதாக இண்டர்போல் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட இண்டர்போல் பாதுகாப்பு ஜெனரல் ஜூர்கன் ஸ்டாக், ''இந்த கொடூரத் தாக்குதலுக்கு இண்டர்போல் வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறது. இலங்கை அரசு அதிகாரிகள் நடத்திவரும் விசாரணைக்கு உதவி செய்ய இண்டர்போல் தயாராக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

பாரிஸைச் சேர்ந்த இண்டர்போல் (சர்வதேசக் காவல்துறை) உலகளாவிய அளவில் காவல்துறை வசதிகளைக் கொண்ட ஓர் அமைப்பாகும்.

அமெரிக்கா, கனடா அறிவுரை

இதற்கிடையே இலங்கை செல்லும் தனது குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் சில பாதுகாப்பு பயண அறிவுரைகளை அளித்துள்ளன.

இதன்படி, ''இலங்கை செல்லும் பயணிகள் உச்சபட்ச எச்சரிக்கையைக் கடைபிடிக்கவேண்டும். சுற்றுலா இடங்கள், போக்குவரத்து முனையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள், ஓட்டல்கள், கிளப்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களைத் தீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டிருக்கலாம். அங்கெல்லாம் பயணிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அரசுத் துறையில் இதுகுறித்துப் பதிவு செய்யவேண்டும். இதன்மூலம் சமீபத்திய பாதுகாப்பு விவரங்களைப் பயணிகள் அறிந்துகொள்ளலாம்'' என்று அந்த அறிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close