[X] Close

மாணவி படிப்பதற்காக இடுப்பில் குழந்தையை சுமந்தபடி பாடம் நடத்திய அன்பாசிரியர்


she-brought-her-baby-to-school-professor-held-her-child-while-he-taught

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 May, 2018 10:41 am
  • அ+ அ-

ஆசிரியர் பணி புனிதமான பணி என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணிப்படி. மாணவர்கள் உயர்வைக் கண்டு ரசிக்கும் மாண்புமிக்கவர்கள் ஆசிரியர்கள்.

அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட பேராசிரியர் ஒருவர் தனது மாணவிக்கு உதவிய சம்பவம் சமூக வலைதளங்களில் பிரபலமாகிவருகிறது.

அமெரிக்காவின் அர்கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் கிறிஸ்டன் பிளாக். 21 வயதான பிளாக்குக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. பல்கலைக்கழகத்துக்கு வந்து செல்ல ஏதுவாக குழந்தைக்கு கேர் டேக்கர் ஒருவரை அவர் நியமித்திருக்கிறார்.

ஆனால், பிளாக்கின் பேராசிரியர் ப்ரூஸ் ஜான்சன் தனது மாணவர்கள் பாடத்தில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்துவது வழக்கம். அவரது வகுப்பில் உள்ள 80 பேரில் பெரும்பாலானோர் ப்ரூஸின் சிறப்பு வகுப்புகளைத் தவறவிடுவதில்லை. ஆனால், பிளாக்கால் அந்த வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. காரணம் மாலையில் கேர்டேக்கரிடம் இருந்து குழந்தை லிஸ்ஸியை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தை ஒருபுறம் படிப்பு மறுபுறம்; பிளாக்குக்கு சிறப்பு வகுப்பைத் தவறவிட விருப்பமில்லை. அப்போதுதான், அவர் வேறு வழியின்றி பேராசிரியரிடம் சென்று, "எனக்கு சிறப்பு வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். ஆனால், என் குழந்தையையும் தனியாக விடமுடியாது. நீங்கள் அனுமதித்தால் நான் என் மகளை வகுப்பறைக்கு கொண்டு வரலாமா?" என வினவினார்.

ப்ரூஸும் அதற்கு சிறிதும் தயக்கமின்றி ஒப்புக்கொண்டார். ப்ரூஸுக்கு 4 பிள்ளைகள் 7 பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரூஸ் அனுமதியுடன் ப்ளாக் குழந்தை லிஸியை முதல்நாள் சிறப்பு வகுப்புக்கு அழைத்து வந்திருக்கிறார். அப்போது பாடம் நடத்திவிட்டு பிளாக்கின் மேசை அருகே வந்த பேராசிரியர் ப்ரூஸ், குழந்தை லிஸ்ஸியைப் பார்த்திருக்கிறார். லிஸ்ஸி அழகாக புன்னகைத்திருக்கிறாள். உடனே, பிளாக்கிடம் அனுமதி பெற்றுக் கொண்டு குழந்தை லிஸ்ஸியை அவர் தூக்கிக் கொண்டார். பின்னர், குழந்தையின் கையில் மூடிபோட்ட மார்க்கர் பேனாவைக் கொடுத்துவிட்டு குழந்தையை இடுப்பில் சுமந்தபடி பாடம் நடத்த ஆரம்பித்தார். குழந்தையும் தொந்தரவு செய்யாமல் ப்ரூஸ் இடுப்பில் அமர்ந்து கொண்டது. 
மிகவும் சிக்கலான கேஸ் லா பாடத்தை ப்ரூஸ் குழந்தையை சுமந்தவாறே எழுதிச் சொல்லிக்கொடுத்துள்ளார். இதனால், பிளாக்கால் பாடங்களை எளிதாகக் குறிப்பெடுக்க முடிந்திருக்கிறது. தனது ஆசிரியரின் அன்பில் நெகிழ்ந்துபோன ப்ளாக் அதை புகைப்படமாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும் புகைப்படத்தை தனது தாய்க்கு அவர் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்த பிளாக்கின் தாயார், "மாணவர்கள் மீது அக்கறை கொண்ட ஆசிரியரைப் பெறுவது பெரும் பேறு" எனக் குறிப்பிடுள்ளார்.

பிளாக், பேராசிரியர் ப்ரூஸின் அன்பை பறைசாற்றும் அந்தப் புகைப்படத்தை பல்கலைக்கழக வேந்தர் கெல்லி டேம்ப்ஹவுசிடம் காட்டியுள்ளார். அவர் அதனை ஃபேஸ்புக்கில் பகிர ப்ரூஸ் பிரபலமானார்.
தனது 24 ஆண்டுகால ஆசிரியர் அனுபவம் கொண்ட ப்ரூஸ், இதுபோல் பல்வேறு சமயங்களில் மாணவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வகுப்புக்கு வந்ததாகக் கூறினார். பிளாக், நன்றி தெரிவித்தபோது ப்ரூஸ், "நீங்கள் படிப்பதற்காக நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்" எனக் கூறியுள்ளார்.

பிளாக்கின் கனவு ஆப்டோமெட்ரிஸ்ட் ஆக வேண்டும் என்பதே. ப்ரூஸ் போன்ற ஆசிரியர்கள் இருந்தால் ஒவ்வொரு மாணவரின் கனவும் மெய்ப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close