[X] Close

உலகைச் சுற்றிவர ஒரு கடல் பயணம்: அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் புறப்படும் 'வைகிங் குரூஸ்' கப்பல்


cruise-london-wiking-cruise

  • பால்நிலவன்
  • Posted: 09 May, 2018 15:35 pm
  • அ+ அ-

உலகத்தைச் சுற்றிவரவேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. பரந்துபட்ட இவ்வுலகின் வெவ்வேறு நிலப்பிரதேசங்களை காணத் துடிப்பவர்களுக்கு இந்த உலகம் ஒரு சொர்க்கம்தான். பணங்காசு மட்டுமல்ல, உலகைக் காண வேண்டுமென்ற ஆசை இதில் முக்கியமானது. சொந்த பிரச்சனைகளையும் மூட்டை கட்டி எரவாணத்தில் போட்டுவிட்டு பறந்து செல்லும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் மனநிலை உள்ளவர்களுக்கு இந்த உலகம் அழகாகத்தான் இருக்கிறது. 

ஆசைகளை திட்டமிடவும் உரிய வசதிவாய்ப்புகளோடு அவற்றை நிறைவேற்றித்தரவும் பல நிறுவனங்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. உலகத்தைச் சுற்றிப் பார்க்க அழைப்பு விடுத்துள்ள வைகிங் குரூஸ் அதில் முக்கியமானது. 

இதுநாள்வரை ஐரோப்பா ஆற்றுப் பயணங்களிலும், பெருங்கடல் பயணங்களிலும் தனித்தனியாக சுற்றுலா ஏற்பாடு செய்துவந்த 'வைகிங் குரூஸ்' கப்பல் பயண நிறுவனம், தற்போது சற்று முன்னேறியுள்ளார்கள். இந்த முறை உலகையே வலம்வரும் ஒரு பிரமாண்ட பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். 

இப்பயணம் 8 மாதங்கள் நீளக்கூடியது. உலகின் 6 கண்டங்களுக்கும் செல்ல இக்கடல்வழிப் பயணம் வகை செய்கிறது. இதில் உலகின் முக்கியமான 113 துறைமுகங்களையும் தொட்டு 59 நாடுகளுக்கும் சென்று நாம் பார்வையிட முடியும். ஒருவருக்கான கட்டணம் 92,990 அமெரிக்க டாலர்கள். 

கிட்டத்தட்ட 93 ஆயிரம் டாலர்கள் கட்டணத்தில் கப்பலில் மருத்துவ வசதிகள், நடனம், இசை, சினிமா, இதர பொழுதுபோக்குகள், உலகின் அத்தனை விதமான உணவு வகைகள், நீச்சல் பயிற்சி, யோகா, லைப்ரரி, தகுந்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துவிதமான வசதிகளையும் பெறலாம். இதில் வை-பை வசதியும் செல்போன் கட்டணங்களும் கூட அவர்களே பொறுப்பு என்றால் இந்த பயணத்தின் சிறப்புகளை புரிந்துகொள்ளலாம்.

இங்கிலாந்தில் தொடங்கும் இக்கப்பல், அட்லாண்டிக் கடல் வழியாக கனடா, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை வழியாக கரீபியன் கடல் வழியாக செல்கிறது. பின்னர் பிரேசில் நாட்டை அடைந்து அங்கிருந்து அமேசான் நதிக்குள் நுழைகிறது. அந்நதி வழியிலேயே தென் அமெரிக்காவின் பல நாடுகளையும் சுற்றிச் செல்கிறது. மத்திய அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு வந்து, பின்னர் தெற்கு பசிபிக் சமுத்திரம் வழியே நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, கிழக்காசிய நாடுகள், அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளின் வழியே சென்று மெடிடேரியன் கடல்வழியே மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயணத்தில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. முழுப் பயணமுமாக அல்லாமல் பாதியில் எங்காவது இறங்கிக்கொள்ளவும் அனுமதி தரும் விதமாக பயண ஏற்பாட்டில் வசதிகள் செய்திருக்கிறார்கள். ஆனால் இதனை உரிய காரண காரியங்களைக் கூறி அதற்கான சான்றுகளை சமர்ப்பித்து முன்கூட்டியே பதிவு செய்துகொண்டுவிட வேண்டும். முழுப்பயணம் என பதிவு செய்துவிட்டு பாதியில் இறங்குகிற வேலையெல்லாம் இதில் நடக்காது.

உலகின் மிக நீண்ட தொடர்ச்சியான இக்கப்பல் பயணம் ஆகஸ்ட் 31, 2019 அன்று லண்டனிலிருந்து புறப்பட உள்ளது. முன்பதிவு தொடங்கிவிட்டது. முந்திக்கொள்பவர்களுக்கு இந்த உலகம் கைக்கெட்டிய தூரத்தில்.

ஜூல்ஸ் வெர்ன் கூட தனது நாவலில் உலகைச் சுற்றிவரும் அனுபவத்தை பதட்டத்தோடு அளித்திருப்பார். துரத்தல், கலாச்சார அதிர்ச்சிகள், ஏமாற்று, பழிவாங்கல், புதிய நிலவியல் சார்ந்த புத்திகூர்மையான அணுகுமுறைகளையெல்லாம் வேகவேகமாக பரவசப்படுத்தியிருப்பார். அதற்குக் காரணம் 80 நாட்களில் பயணத்தை முடிக்கவேண்டும் என்பதுதான். இவர் வழியைப் பின்பற்றி உண்மையிலேயே ஒரு பெண்மணி 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றிவந்த வரலாறும் உண்டு. 

ஒருவேளை வைகிங் குரூஸ் போல சவகாசமாக 245 நாட்கள் பயண வசதிகள் எல்லாம் அக்காலத்தில் இருந்திருக்குமெனில், 80 நாட்களுக்குள் உலகப்பயணம்என்று ஜூல்ஸ் வெர்ன் தீட்டிய தன் நாவலில் இவ்வளவு பதட்டம் வேண்டியிருக்காதோ என்னவோ.....


 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close