[X] Close
 

ஆதாரில் எந்த பிரச்சினையும் இல்லை, மற்ற நாடுகளிலும் செயல்படுத்த வேண்டும்: பில்கேட்ஸ் பாராட்டு


billgates-supports-aadhar

பில்கேட்ஸ் | கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 03 May, 2018 17:25 pm
  • அ+ அ-

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ள ஆதார் தொழில்நுட்பத்தில் சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இது சிறந்த வழிமுறை என்பதால் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இந்தத் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் என்றும் பில் கேட்ஸ் கூறியுள்ளார். 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நந்தன் நிலேகனி ஆதாரின் தலைமை வடிவமைப்பாளராக கருதப்படுகிறார். உலக வங்கியுடன் இணைந்து அவர் மற்ற நாடுகளில் ஆதாரை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி ஆலோசித்து வருகிறார் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். 

"ஆதாரின் நன்மைகள் மிக அதிகம். மற்ற நாடுகளும் இதை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் ஒரு நாடு எவ்வளவு சீக்கிரமாக தங்கள் பொருளாதரத்தை வளர்க்கிறது, மக்களுக்கு வசதி தருகிறது என்பதைப் பொருத்தே அந்த நாட்டின் ஆட்சியின் தரம் இருக்கும். 

ஆதாரை மற்ற நாடுகளுக்கு எடுத்து செல்ல நாங்கள் உலக வங்கிக்கு நிதி அளித்துள்ளோம். ஆதாரில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஏனென்றால் அது வெறும் அடையாள சரிபார்ப்பு முறை மட்டுமே. ஆதாரில் என்ன தகவல்கள் சேகரிக்கப்படுகிறது, யாரால் அந்தத் தகவல்களை படிக்க முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

ஆதார் தகவல்கள் எந்த அமைப்பிடம் உள்ளது என்பதை ஒவ்வொன்றாகப் பார்த்து அதை சரியாக நிர்வகித்தாலே போதும். இந்தியாவில் வங்கிக் கணக்குகளுக்கு அதைப் பயன்படுத்தியுள்ளனர். அது நன்றாகவே கையாளப்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். ஆதாரை வைத்து மொபைல் வாங்கலாம், வங்கிக் கணக்கும் பெறலாம். 

நந்தன் நிலேகனியின் நல்ல நண்பன் நான். அவரது படைப்பாற்றலை போற்றுபவனும் கூட. அவரது டிஜிட்டல் முன்னெடுப்புகள் கல்விக்கும், நாட்டை ஆள்வதற்கும் உதவியாக இருக்கும்" என்று பில்கேட்ஸ் பேசியுள்ளார்.

முன்னதாக, 2016 நவம்பர் மாதம், நிதி ஆயோக் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பில்கேட்ஸ், ஆதார் திட்டத்தை உலகில் வேறெந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்தவில்லை. ஏன் பணக்கார நாடுகளுக்குக் கூட அது தோன்றவில்லை என்று பாராட்டியிருந்தார். 

- பிடிஐ



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close