[X] Close

மலர்ந்த மனிதநேயம்: கேன்சர் சிறுவனுக்கு ஸ்டெம்செல் தானம் செய்ய கொட்டும் மழையில் காத்திருந்த 5,000 பேர்


5-000

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 08 Mar, 2019 13:57 pm
  • அ+ அ-

 

 

 

அரிய வகை ரத்த கேன்சரால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனுக்கு ஸ்டெம்செல் தானம் செய்வதற்காக இங்கிலாந்தில் 4,855 பேர் முன்வந்தனர். கொட்டும் மழையிலும் பொறுமையாக வரிசையில் நின்ற அவர்களை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

இங்கிலாந்து, வோர்செஸ்டரைச் சேர்ந்த ஒலிவியா சேக்ஸல்பி மற்றும் ஜேமி லீ தம்பதியின் மகன் ஆஸ்கர் சேக்ஸல்பி லீ.  5 வயதான அவனுக்கு லுக்கீமியா வகையிலான அரிய வகை கேன்சர் ஏற்பட்டது. அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அழிந்துவரும் ஸ்டெம் செல்லுக்குப் பதிலாக அதேவகை புதிய ஸ்டெம்செல்களைப் பொருத்தினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கூறினர். 3 மாதத்துக்குள் இந்த சிகிச்சை நடைபெற வேண்டும் என்றும் கெடு விதித்தனர்.

 

இதை அறிந்த உள்ளூர் மக்கள் சிறுவன் ஆஸ்கருக்கு உதவ முன்வந்தனர். வோர்செஸ்டரில் உள்ள பிட்மாஸ்டன் தொடக்கப் பள்ளியில், வார உறுதியில் கொடையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக முகாம் ஒன்று நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் இதுகுறித்துப் பிரச்சாரங்கள் நடந்தன.

 

இறுதியில் ஆஸ்கருக்கு ஸ்டெம்செல்லைத் தானமாக வழங்க ஏராளமானோர் முன்வைந்தனர். எதிர்பாராத விதமாக மழை கொட்ட ஆரம்பித்தது. ஆனாலும் அசராத கொடையாளிகள், பொறுமையாக வரிசையில் நின்றனர். ஸ்டெம்செல் தானம் செய்வதற்காக சுமார் 4,855 பேர் கலந்துகொண்டனர். இந்த சம்பவம் முன்னெப்போதும் இல்லாத சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்துப் பேசிய சிறுவனுன் தந்தை சேக்ஸல்பி, ''ஆரம்பத்தில் எங்களால் ஆஸ்கரைக் காப்பாற்ற முடியாது என்று சோர்ந்து போனோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனின் புன்னகையைக் காணும்போது எங்களால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது. ஆஸ்கரின் தைரியம் எங்களுக்கு தெம்பை ஊட்டியது.

 

அந்த நேரத்தில்தான் இன்னும் வலிமையானோம். ஒருமுறைகூட அவன் சோர்ந்து நாங்கள் பார்த்ததில்லை. அவனுக்காக இத்தனை பேர் ஒன்றுகூடியது மிகுந்த நெகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close