[X] Close

பிரதமர் மோடி, , இந்திய ராணுவம், இந்துமதம் பற்றிய வெறுப்புக்கருத்துக்களை கூறிய அமைச்சர் நீக்கம்: பாக். பிரதமர் இம்ரான் அதிரடி


  • முத்துக்குமார்
  • Posted: 06 Mar, 2019 09:50 am
  • அ+ அ-

பாகிஸ்தானின் ஆளும் பிடிஐ கட்சியின் பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் பண்பாட்டு அமைச்சர் ஃபயாசுல் ஹசன் சோஹான் இந்துமதம், மோடி மற்றும் இந்திய ராணுவம் பற்றிய வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களைக் கூறியதற்காக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி இம்ரான் கான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இவரது கருத்துக்களை மிகவும் பொறுப்புடன் அணுகிய இம்ரான் கான் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தாருக்கு அறிவுறுத்தி ஃபயாஸுல் ஹசன் சோஹானை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கச்செய்தார்.

இது தொடர்பாக பிடிஐ கட்சி தன் ட்விட்டரில், “இன்னொருவர் நம்பிக்கையை புண்படுத்துவது எந்த ஒரு கதையாடலின் அங்கமும் கிடையாது. சகிப்புத்தன்மை என்ற அடிக்கட்டுமானத்தில் மேல்தான் பாகிஸ்தான் என்ற நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 

முதல்வர் புஸ்தார், ஃபயாஸுல் சோஹான் மன்னிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார், ஆனால் பிரதமர் இம்ரான் உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டார். 

மேலும் பிடிஐ கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மனித உரிமை அமைச்சர்கள் ஃபயாசுல் பேச்சுக்கு கடும் கண்டனங்களை எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

ஃபயாசுல் ஹசன் சோஹான் கூறியது என்ன?

“நான் பிரதமர் மோடியையும் இந்திய ராணுவத்தையும்தான் விமர்சித்தேன், இந்துக்களை அல்ல.  இந்து சமூகத்தினரை அது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், என் கருத்து பாகிஸ்தான் வாழ் இந்து மக்களுக்கு எதிரானது அல்ல” என்றார்.

கடந்த மாதம் இந்துக்களை குறிவைத்து, ‘பசு சிறுநீரைக் குடிப்பவர்கள்’ என்று கிண்டலடித்திருந்தார் ஃபயாசுல் சோஹான். மேலும், “நாங்கள் முஸ்லிம்கள் எங்களுக்கு ஒரு கொடி உள்ளது, மவுலா அலியாவின் தீரத்தின் கொடி, ஹஸ்ரத் உமராவின் வீரக்கொடி, உங்களிடம் இது போன்ற கொடி உள்ளதா?

எங்களை விட 7 மடங்கு நீங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணம் வேண்டாம். எங்களிடம் உள்ள எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கல் சிலைகளை வணங்குபவர்கள்” என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனையடுத்து இம்ரான் கான் கட்சி இதனை முட்டாள்தனமானது, ஏற்க முடியாது என்று கண்டித்து அந்த அமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்திய நிலையில் அவரது மன்னிப்பையும் மீறி  அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close