[X] Close

பாகிஸ்தானின் பாலகோட் முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்கியது உண்மை: மசூத் அசார் சகோதரர் அம்மர் ஒப்புதல்


mazood-azhar

  • kamadenu
  • Posted: 04 Mar, 2019 10:50 am
  • அ+ அ-

‘‘பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது உண்மை’’ என்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் மவுலானா அம்மர் உறுதிப்படுத்தி உள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, கடந்த மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் மலைஉச்சியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது, இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் 350 தீவிரவாதிகள் பலியானதாகத் தகவல்கள் வெளியாயின.

ஆனால், தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும், ஆதாரங்களை வெளியிடவில்லை என்று மத்திய அரசு மீது புகார் கூறினர். இந்நிலையில், பாலகோட் முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் மவுலானா அம்மர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப் ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமதுவின் ‘தலீம்-உல்-குரான் மதரஸா மதப்பள்ளி மீது, இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது உண்மைதான். இந்தியாவை மீண்டும் தாக்குவோம் என்று நாங்கள் புதுடெல்லியை எச்சரித்த பிறகும் கூட, பாலகோட் மதரஸா மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த மதரஸாவில் ஜிகாதிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுவது உண்மைதான். பாலகோட் முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்திய பிறகு, ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த மேலும் பல தற்கொலைப் படையினரை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியா நுழைந்து பாலகோட் மதரஸா மீது குண்டுகளை வீசிவிட்டது. அதற்கு பதிலடியாக காஷ்மீரில் ஜிகாத் யுத்தத்தை மீண்டும் தொடுக்க இந்தியா எங்களை தூண்டிவிட்டுள்ளது என்றார்.

இம்ரான் மீது கோபம்மவுலானா அம்மர், அந்த ஆடியோவில் மேலும் கூறும்போது, ‘‘பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தனை, பிரதமர் இம்ரான் கான் விடுவித்துவிட்டார். இதன்மூலம் அவர் எதிரியிடம் சரண்டர் ஆகியுள்ளார்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு மவுலானா அம்மர் கூறியுள்ளார்.

இந்திய விமானங்கள் கடந்த மாதம் 26-ம் தேதி பாலகோட் முகாம் மீது நடத்திய தாக்குதலில், மவுலானா அம்மரும், மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசாரும் பலியானதாகத் தகவல்கள் வெளியாயின. பாலகோட் தீவிரவாத முகாமை, யூசுப் அசார்தான் கவனித்து வந்துள்ளார். காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் எல்லாம் அம்மார் தலைமையில்தான் நடக்கிறது என்று கூறப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close