[X] Close

அபிநந்தன் பத்திரமாக நாடு செல்ல வேண்டும்: பதாகைகளை ஏந்திய பாகிஸ்தானியர்கள்; சமூக வலைதளங்களில் பாராட்டு


pakistanis

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 22:46 pm
  • அ+ அ-

அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று லாகூரில் பாகிஸ்தானியர்கள் பதாகைகள் வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக நேற்று, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில் அதனைத் தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டன.

இதனிடையே அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், ''அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார்'' என்று அறிவித்தார்.

இம்ரான் கானின் இந்த முடிவுக்கு இந்திய மக்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் ’போர் வேண்டாம்’ என்ற  பதாகைகளை ஏந்தியபடி  லாகூர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு முன்  நின்று கொண்டிருந்தனர். 

தற்போது இந்தப் புகைப்படங்கள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து ’போர் வேண்டாம்’ சகோதரத்துவம் போற்றுவோம் என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் மக்களின் இந்த முயற்சிக்கு இந்தியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close