[X] Close

அடுத்த 72 மணிநேரம் முக்கியமானது: பதற்றத்தை ஏற்படுத்திய பாக். அமைச்சர் பேச்சு


pakistan-minister-says-next-72-hours-crucial

  • போத்திராஜ்
  • Posted: 27 Feb, 2019 15:13 pm
  • அ+ அ-

 

இஸ்லாமாபாத், பிடிஐ

அடுத்த 72 மணிநேரம் நமக்கு மிக முக்கியமானது, இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், அது 2-ம் உலகப்போரைக் காட்டிலும் மிகப்பெரியதாக இருக்கும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமெட் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில், புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பலை நிலவியது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது நேற்று இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதிக்குள் பறந்த 2 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும், விமானி ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தகவலைத் தொடர்ந்து மத்திய அரசு மறுத்து வருகிறது.

அதேசமயம், காஷ்மீர் பகுதி ரஜவுரி பகுதியில் பறந்த பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனால், இருநாட்டு எல்லைப்பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. ஜம்மு, லே, சிறீநகர், அமிர்தசரஸ், சண்டிகர் விமானநிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்ந சூழலில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் பேசியுள்ளது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமெட், இஸ்லாமாபாத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " அடுத்த 72 மணிநேரம் நமக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவுடன் ஒருவேளே போர் ஏற்பட்டால், அது 2-ம் உலகப்போரைக் காட்டிலும் மோசமானதாக, பெரிதாக அமையும். அந்த போர் மிகப் பயங்கரமானதாக இருக்கும், அதற்குப் பாகிஸ்தான் முழுமையாகத் தயாராகி இருக்கிறது.

பாகிஸ்தான் முழுமையும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது, போருக்கான மனநிலையில்தான் இருக்கிறோம். ஏற்கனவே அவசர கால நிலைக்கான சட்டங்களைப் பிறப்பித்து அதைப் பின்பற்றி வருகிறோம். ஆதலால், அடுத்துவரும் 3 நாட்கள் மிக முக்கியமானவை. இப்போதுள்ள சூழல் அடுத்துவரும் நாட்களில் போராக மாறலாம், அல்லது அமைதிக்கும் திரும்பலாம் " எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close