[X] Close

 தீவிரவாதி ஹபிஸ் சயித்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை: பாகிஸ்தான் நடவடிக்கை


pakistan-bans-hafiz-saeed-led-jud-and-its-charity-wing-fif

  • போத்திராஜ்
  • Posted: 22 Feb, 2019 09:16 am
  • அ+ அ-

 

இஸ்லாமாபாத், பிடிஐ

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹபிஸ் சயித் தலைமையிலான ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்புக்கும், அவர் நடத்தி வந்த பலாஹ் இ இன்சானியத் அமைப்புக்கும் தடை விதித்து பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டம் இஸ்லாமாபாதில் நேற்று நடந்தது.அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 புல்வாமா தாக்குதலில் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி வந்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. ஆனால், புல்வாமா தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறப்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தடைவிதிக்கப்படவி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தாவா, அவர் நடத்தி வரும் பலாஹ்-ஏ-இன்சானியத் தொண்டு நிறுவனம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் "   எனத் தெரிவித்தார்.

ஜமாத்-உத்-தாவா, அமைப்பு பாகிஸ்தானில் சமூக நல அமைப்பு போலவே செயல்பட்டு வந்தபோதிலும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் மறைமுகமாக  ஈடுபடுகிறது. ஜமாத் உத் தவாவின் இரு அமைப்புகள் சார்பில் பள்ளிகள், மதபோதனை மையங்கள், மருத்துவமனைகளை இந்த அமைப்புகள் நடத்தி வருகின்றன. ஏறக்குறைய 50 ஆயிரம் தன்னார்வலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது, ஜகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஹபீஸ் சயீதை கடந்த 2012-ஆம் ஆண்டே சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துவிட்டது. அவரைப் பிடித்துக் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹபீஸ் சயத்தின் இரு அமைப்புகளையும் தீவிரவாத இயக்கமாக அறிவித்து கடந்த ஆண்டு பாகிஸ்தான் அவசரச் சட்டம் கொண்டுவந்தது. ஆனால், காலாவதியாகிவிட்டதால், இப்போது, தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close