[X] Close

தூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசனை


pak

  • நெல்லை ஜெனா
  • Posted: 18 Feb, 2019 13:26 pm
  • அ+ அ-

புதுடெல்லி

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இருநாடுகள் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்முத்தை ஆலோசனை நடத்துவதற்காக அந்நாடு அழைத்துள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.

இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை நாடு என்ற சலுகையை மத்திய அரசு ரத்து செய்தது.

அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பால் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 200 சதவீத வரி விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தூதரை அழைத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்முத்தை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் இதுபற்றி ஆலோசிப்பதற்காக அவரை பாகிஸ்தான் அரசு அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பைசாரவை மத்திய அரசும் அழைத்து ஏற்கெனவே ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close