[X] Close

தற்கொலைப் படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தூண்டுதல்: ஈரான் குற்றச்சாட்டு


iran-general-says-pakistan-backs-group-behind-suicide-bomb

ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகம்மது அலி ஜாஃபரி

  • பால்நிலவன்
  • Posted: 16 Feb, 2019 17:43 pm
  • அ+ அ-

ஈரானில், கடந்த புதன் அன்று 27 ஈரானிய ராணுவத் துருப்புகள் மீது தற்கொலைப் படை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பின்னால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் ஆதரவு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்பஹான் நகரில் நேற்று மாலை கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகள் அவரவர் சொந்த ஊர்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று தெரிகிறது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகம்மது அலி ஜாஃபரி தெரிவித்ததாவது:

''இஸ்லாத்திற்கும் ஈரானிய புரட்சிகர அரசுக்கும் எதிரானவர்களுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் தந்துள்ளது. அவர்கள் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசுக்குத் தெரியும். அதேநேரத்தில் அவர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆதரித்து வருகின்றன. அத்தீவிரவாதிகள் அனைவரும் ஜெய்ஷ் அல்-அதுல் (நீதியின் ராணுவம்) இயக்கத்தைச் சேர்ந்த ஜிகாதிகள் ஆவர்.

ஜெய்ஷ் அல் அதுல் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு தண்டிக்கவில்லையெனில், அத்தகைய ஈரானிய எதிர்ப்பு சக்திகளான எதிர்-புரட்சிகரப் படைகளுக்கு பதிலடி கொடுப்போம். தீவிரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் துணை நிற்பதோடு, தீவிரவாதத்தைத் தூண்டி வருமேயானால் அதற்கான எதிர்விளைவுகளையும் விரைவில் அவர்கள் சந்தித்தேயாக வேண்டும் என்று எச்சரிக்கிறோம்''.

இவ்வாறு ராணுவத் தளபதி பேசினார்.

ஜெய்ஷ் அல் அதுல் தீவிரவாத இயக்கம் 2012-ல் உருவானது. இது ஜூன்டால்லா (கடவுளின் படைவீரர்கள்) என்ற சன்னிப் பிரிவு தீவிரவாத இயக்கத்திலிருந்து தனியே பிரிந்து வந்த இயக்கம்.

டெஹ்ரானில் பத்தாண்டுகளுக்கு முன்னர், 2010ல் ஜூன்டால்லா இயக்கத் தலைவர் அப்துல்மாலிக் ரிக்கி தூக்கிலிடப்பட்டதை அடுத்து ஒரு நாடெங்கும் கொடூர தீவிரவாதக் கிளர்ச்சியை இவ்வியக்கம் முன்னெடுத்தது. அப்போது உருவானதுதான் ஜெய்ஷ் அல் அதுல் தீவிரவாத இயக்கம்.

கடந்த புதன் கிழமை அன்று தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பெலுசிஸ்தானில் சாலையில் வந்துகொண்டிருந்த பேருந்தைக் குறிவைத்து இந்த தற்கொலைப் படை  வெடிகுண்டு வீசித்  தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பயணித்த 27 ஈரானிய ராணுவத்தினர் பலியாகினர்.

சமீபத்திய ஆண்டுகளில் ஈரானிய பாதுகாப்புப் படைகள் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது. மேலும், இஸ்லாமியப் புரட்சியின் 40-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் ஈரானில் ஒரு வாரத்திற்கு மேலாக நடந்து முடிந்த உடன் இச்சம்பவம் நடைபெற்றது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close