[X] Close

அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்படுமா?- அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை


trump-says-getting-closer-to-declare-national-emergency

  • போத்திராஜ்
  • Posted: 02 Feb, 2019 16:37 pm
  • அ+ அ-

 

வாஷிங்டன், பிடிஐ

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக மெக்சிகோ எல்லை வழியாக வரும் அகதிகளைத் தடுக்க சுவர் எழுப்பு பணிக்கு நிதிதேவைக்காக அவசரநிலை அறிவிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் அவசரநிலையை அதிபர் ட்ரம்ப் அறிவித்துவிட்டால் அவருக்கு உரிய வீட்டோ அதிகாரத்தால், ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்களின் ஒப்புதல் இல்லாமல் நிதியைச் சுவர் எழுப்பும் பணிக்காக திருப்பிவிடமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருகின்றனர். இதைத் தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், இதற்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, நிதியாண்டுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெறமுடியாமல் அமெரிக்க நிர்வாகம் முடங்கியது. ஆனால், சுவர் எழுப்ப நிதிஒதுக்க ஒப்புதல் தர முடியாது என்று ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை தொடர்ந்து மறுத்துவருகிறது.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்க எல்லைப் பாதுகாப்புக்காக சுவர் எழுப்ப நான் முயற்சித்து வருகிறேன். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நான் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களுடன் பேச்சுநடத்துவது என் நேரத்தை வீணாக்குகிறது.

குறிப்பாகப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி, மிகவும் அகங்காரம் பிடித்தவர் போல நடந்து, மோசமான அரசியல் செய்கிறார். அவர் நாட்டுக்கு ஏற்ற நல்ல குடிமகள் அல்ல. நம் நாட்டுக்கு எல்லைப் பாதுகாப்பு தேவை என்பது அவருக்குத் தெரியும் ஆனால், தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கிறார். மக்கள் கடத்தப்படுதல் குறித்து எந்தவிதமான கவலையும் பெலோஸிக்கு இல்லை.

எல்லையில் சுவர் எழுப்ப இப்போது நிதி தேவை. ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் இவ்வாறு தடை ஏற்படுத்தினால், நாட்டில் அவசரநிலையை கொண்டுவர வேண்டியது இருக்கும். ஆனால், அப்படியெல்லாம் நடக்காது என்று நான் நினைக்கிறேன். ஜனநாயக கட்சிக்கு எல்லைப் பாதுகாப்பு தேவையில்லை.நான் அவர்களிடம் பேசிய வகையில் எல்லையில் சுவர் எழுப்புவது என்பது மரபைமீறியது, அது பயனளிக்காது என்று நம்புகிறார்கள்.

ஆனால், என்னைப் பொருத்தவரை நான் சுவர் எழுப்பும் விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன். சுவர் எழுப்பும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவேன். எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த 2,500 ராணுவ வீரர்களை அனுப்பி இருக்கிறேன். அவர்கள் அங்கிருக்கும் போலீஸாருக்கு உதவியாக இருப்பார்கள். ராணுவம் நமது நாட்டுக்கு மிகச்சிறந்த பணியை செய்து வருகிறது. குறிப்பாக எல்லையில் சுவர் எழுப்புதல், வேலை அமைத்தல் பணியையும் செய்கிறார்கள்.

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பெலோஸி குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சித்ததை அவரின் அலுவலகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close