சவுதி அரேபியாவில் கனமழை: 12 பேர் பலி

சவுதி அரேபியாவில் பெய்த கடுமையான மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து சவுதி மன்னரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தரப்பில், ''சவுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக சவுதி அரேபியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இதில் 12 பேர் பலியாகியுள்ளனர். இதில் 10 பேர் தபுக் நகரைச் சேர்ந்தவர்கள். கனமழையில் சிக்கிய 200க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.
தபுக் நகரில் பல இடங்களில் ஓடும் வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அவர்களை பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பின்னர் மீட்புப் படையினர் மீட்டனர் என்று சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெப்பச் சலனம் காரணமாக பல நாடுகளில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களுக்குள் பெய்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடுகிறது. இம்மாதிரியான வானிலைத் தன்மை பாலைவன நாடுகளாக அடையாளப்படுத்தப்படும் மத்திய கிழக்கு நாடுகளில் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கத்தாரில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழையின் அளவு கடந்த சனிக்கிழமையன்று, ஒரேநாளில் கொட்டித் தீர்த்தது. இதனால், தலைநகர் தோஹா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
.