[X] Close

விடுமுறையில் சுற்றுலா சென்ற வீட்டு உரிமையாளர்: 3 நாட்கள் லிஃப்டில் சிக்கித் தவித்த பெண் ஊழியர்


3

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 31 Jan, 2019 13:37 pm
  • அ+ அ-

வார இறுதி விடுமுறைக்காக வீட்டு உரிமையாளர்கள் சுற்றுலா சென்ற நிலையில், வீட்டின் லிஃப்டில் 3 இரவு, பகல்கள் சிக்கித் தவித்தார் அங்கு வேலை பார்த்த பெண் ஊழியர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வாரன் ஸ்டீபன்ஸ். கோடீஸ்வரரான அவருக்கு மன்ஹாட்டன் பகுதியில் 5 அடுக்கு மாடி சொகுசு வீடு உள்ளது. அங்கே மரைட்ஸ் ஃபோர்ட்டாலிஸா என்னும்  53 வயதான பெண், வீட்டு வேலை செய்துவந்தார். சுமார் 18 வருடங்களாக அந்த வீட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் வீட்டு உரிமையாளர்கள் அவரின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.

வார இறுதியில் விடுமுறைக்காக வாரன் ஸ்டீபன்ஸ் மற்றும் மனைவி ஹாரியத் ஸ்டீபன்ஸ் இருவரும் சுற்றுலா சென்றனர். அப்போது வீட்டு வேலையை முடித்துவிட்டு இரண்டாவது மாடியில் இருந்து மூன்றாவது மாடிக்கு லிஃப்டில் வந்துகொண்டிருந்தார் ஃபோர்ட்டாலிஸா. திடீரென லிஃப்ட் பாதியில் நின்றுவிட்டது.

வீட்டு உரிமையாளர்கள் இல்லாததால் செய்வதறியாமல் தவித்தார் ஃபோர்ட்டாலிஸா. வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தண்ணீர், உணவின்றி லிஃப்டிலேயே இருந்தார்.

திங்கட்கிழமை காலை ஸ்டீபன்ஸ் தம்பதியினர் வீடு திரும்பினர். நிலைமை அறிந்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து வந்து ஃபோர்ட்டாலிஸாவை மீட்டனர்.

மயக்கத்தில் இருந்த ஃபோர்ட்டாலிஸாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close